Wednesday, 28 November 2012

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தா

லும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

* பானை போன்ற வயிறை குற
ைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

Saturday, 3 November 2012

இராஜீவ் காந்தி - கொலை அல்ல, மரணதண்டனை

மறைந்த எங்கள் தோழர் முத்துகுமாருக்கு நடக்கின்ற இந்த வீரவணக்கப் பொதுக்கூட்டத்திற்கு வந்து மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களே, அனைவருக்கும் வணக்கம். இன்று ஈழத்தில் நம்முடைய இன சொந்தங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், அதற்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நாடாக ஏற்றுக்கொண்டிருக்கின்ற இந்திய நாடு உதவிக்கொண்டிருக்கின்ற வேளையில், பல்வேறு சிக்கல்களைப் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றோம், உரையாடிக்கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் நான் ஒரு செய்தியை மட்டும் பேச நினைக்கிறேன். ஈழத்தின் சிக்கல்களைப் பற்றி சீமான் அடுத்துப் பேச இருக்கிறார்.

நான் பேச நினைப்பது, இந்த நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிற சில முழக்கங்கள். ‘மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்’ -இது காங்கிரஸ் முழக்கம்; ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு’ -இது மார்க்சிஸ்டு முழக்கம்; ‘சகோதர யுத்தம், சர்வாதிகாரி’ - திமுக முழக்கம். இதில் ஒரு முழக்கத்தை மட்டும், - நாம் யாரை ஒழிக்க நினைக்கிறோமோ - அந்த காங்கிரசின் முழக்கத்தை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ‘மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்’ என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எதைக் காரணமாக வைத்து இப்படி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்? ‘ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி கொலையை நாங்கள் மறக்க மாட்டோம் அதற்காக ஈழத்தமிழர்களை, புலிகளை மன்னிக்க மாட்டோம்’ என்று சொல்கிறார்கள். அது குறித்து சில செய்திகளைப் பேச விரும்புகிறேன்.

Sanjay gandhi, Indira Gandhi and Rajiv gandhi நம் உடலில் ஏற்பட்ட புண்போல தமிழர் வரலாற்றில் ஒரு புண் தோன்றியது. ஈழத்தில், ஈழ விடுதலை ஆதரவில், தமிழர்களுடைய உரிமை முழக்கத்தில் ராஜீவ் காந்தி பெயரால் ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட அந்தக் கீறல் ஊறுபுண்ணாகப் போய்விட்டது. அது உள்ளே சீழ் பிடித்துக்கொண்டிருக்கிறது. காலை அசைத்தால் வலிக்கிறது; நடந்தால் வலிக்கிறது. அந்தப் புண்ணை கீறிவிட்டுத்தான் ஆற்றவேண்டும். அதை நாம் யாரும் செய்யவில்லை. ‘நாம் அந்தப் புண்ணைக் கீறிப்பார்க்க வேண்டும்’ என்று நான் விரும்புகிறேன்.

கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தி யார்? அவன் எந்தக் கட்சியைச் சார்ந்தவன்? காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்கின்ற இயக்கங்களில் ஒன்றாக இருக்கின்ற எனக்கு, அதை விளக்கவேண்டிய கடமை இருக்கிறது. யார் அந்தக் காங்கிரசுக்காரர்கள்? இந்தத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? எப்பொழுதாவது நன்மை செய்து இருக்கிறார்களா? நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட்டு இருக்கிறார்களா? காங்கிரஸ் தலைமையில் நமக்காக யாராவது உட்கார்ந்து இருக்கிறார்களா? ஒருமுறை காமராஜர் அமர்ந்திருந்தார். அதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? அவர் கூட சொன்னார், தலைமை அமைச்சர் தேர்வுக்காக ஆட்களைத் தேடித்திரிந்த காமராஜரிடம், ஏன் நீங்களே நிற்கக் கூடாது என்று கேட்டார்கள். காமராஜர் சொன்னார், ‘நான் சொன்னா போடுவான் நின்னா போட மாட்டான்’னு.

தமிழனை ஏற்றுக்கொள்ள மாட்டான் வடவன். அவன் நமக்கு வரலாற்றுப் பகைவன், நம்மை வரலாற்றுப் பகையாகக் கருதுகிறான். இனத்தால் ஆரியன், திராவிடரான நம்மை ஏற்றுக்கொள்வதில்லை, மொழியால் சமஸ்கிருதக் குடும்பத்துக்காரன், திராவிட மொழிக்குடும்பமான தமிழை ஏற்றுக்கொள்வதில்லை. அதுதான் இலங்கையிலும் நடக்கிறது. ஆரிய இனத்தைச் சார்ந்தவன், சமஸ்கிருத மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவன், திராவிட இனத்தைச் சார்ந்த தமிழ் மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவனை நசுக்கப் பார்க்கிறான். இங்கு இருக்கின்ற வரலாற்றுப் பகைவன் அங்கு இருக்கிற வரலாற்றுப் பகைவனுக்கு உதவுகிறான். நாம் நம்மினத்தவர்களுக்கு உதவ நினைக்கிறோம். ஆனால் தடையாக வந்து நிற்கிறார்கள் காங்கிரசுக்காரர்கள்.

காந்தி, நேரு காலத்திலிருந்து, எப்போதாவது இந்தக் காங்கிரசு நமது தமிழர்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறதா என்று வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், கண்டுபிடிக்க முடியவே இல்லை. எந்த்த தடயமும் காணோம். எந்தச் செய்தியையும் காணோம்.

ஆரம்பத்தில் இந்தியை ஆட்சிமொழி ஆக்குவதற்கு, தமிழர்களுடைய மொழி உரிமையை நசுக்குவதற்கு இந்தக் காங்கிரசு காரணமாக இருந்தது. காங்கிரசு கட்சியில் ஆட்சிமொழித் தீர்மானம் வந்தபோது இந்திக்கு ஆதரவாக சரிபகுதி வாக்குகள், இந்திக்கு எதிராக சரிபகுதி வாக்குகள். காங்கிரசு தலைவர் பட்டாபி சீதாராமையா தன் வாக்கை இந்திக்கு அளித்துதான் காங்கிரசு கட்சியில் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அரசியல் நிர்ணய சபையில் வாக்கெடுப்பு வந்தது. அங்கும் சரிசமமான வாக்குகள் இரண்டு பக்கமும். நிர்ணயசபைத் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத் வாக்களித்துத்தான் இந்தி ஆட்சிமொழியானது. கள்ள ஓட்டு போல, இந்த தலைவர் ஓட்டு. யாரும் வாக்களிக்கவில்லை, கள்ள ஓட்டை காங்கிரசு தலைவர்கள் போட்டுத்தான் நம் மீது இந்தியைத் திணித்தார்கள்.

இட ஒதுக்கீடு வந்தது. 1951-யில் பெரிய யோக்கியன் போல் பேசினார் நேரு, ‘நான் பொருளாதார அளவுகோலை ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று. பெரியார் சொல்லுவார், ‘முற்போக்கு வேடம் தரித்த பிற்போக்குவாதி அவர்’ என்று. ஆனால், ‘நான் பொருளாதாரம் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று 1951-யில் சொன்ன நேரு, 1961-யில் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார், ‘சாதி அடிப்படையில் கொடுப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பொருளாதார அடிப்படையில் வேண்டுமானால் கொடுங்கள்’ என்று.

இலங்கை வரலாற்றில் அப்படி ஒன்று இருக்கின்றது. 1956-யில் சிங்கள ஆட்சி மொழி சட்டம் வந்த பொழுது, ஒரு மொழி என்று சொன்னால் இது இரு நாடாகிவிடும், இரு மொழி என்று சொன்னால் ஒரே நாடாக இருக்கும் என்று சொன்னவர் டி சில்வா. 1972-யில் அவர் தலைமையில் அரசியல் சட்டம் எழுதப்பட்டது, அவர் தான் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று எழுதினார். வரலாற்றில் மனிதர்கள் மாறுகிறார்கள். நம் வரலாற்றில் நமக்கு எதிராக மாறியவன் நேரு. இந்திரா காந்தி, நமது உரிமை நிலமான கட்சத்தீவை வாரிக்கொடுத்துவிட்டு, இன்று வரை தமிழக மீனவர்கள் சாவிற்குக் காரணமாக இருந்தவர், அவர் மீது நிறைய குற்றங்களைச் சொல்லலாம்.

ராஜீவ் காந்தியைப் பற்றி பேச வேண்டியிருப்பதால் அதற்கு வருவோம். ராஜீவ் காந்தி யார்? வேளாண்மை செய்யும் விவசாயிக்கு விதை முக்கியம். அதில் எவனாவது கேடு செய்தால் வேளாண்மையே, மகசூலே பாழ். அவன் வாழ்க்கையே முடிந்தது. ஒரு நாட்டுக்கு பாதுகாப்பு தான் முக்கியம். பாதுகாப்புக்கு நல்ல வீரன் வேண்டும், நல்ல படைக் கருவி வேண்டும். பாதுகாப்புக்கு வாங்கிய படைக் கருவியில் குறைந்த தரம் உள்ளதை வாங்கி பணம் சம்பாரித்து போஃபோர்ஸ் ஊழல் செய்த அயோக்கியன் ராஜீவ் காந்தி. அவன் நம் நாட்டு மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தனக்கு காசு சேர்த்துக் கொண்டவன். அவன் தான் மரண தண்டனை வழங்கப்பட்டவன். அதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து மண்டல் குழு, இந்த நாட்டில் 52 சதமாக இருக்கிற பிற்படுத்தப்பட்ட மக்களினுடைய உரிமைக்காக பரிந்துரை செய்யப்பட்ட மண்டல் குழு பார்ப்பனர்களால் எதிர்க்கப்பட்டதாக நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ராஜீவ் காந்தியும் அதை எதிர்த்தவன். மண்டல் நிறைவேற விடமாட்டேன் என்று சொன்னவன் ராஜீவ் காந்தி. பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருந்தவன்.

ராஜீவ் அடிப்படை அறநெறியிலாவது நேர்மையானவனா? ஜான் நீல் என்பவன், இங்கிருந்து இந்திய அரசால், ஒரு விடுதலைப் புலி வீரன் அங்கு அனுப்பப்பட்டான். சில செய்திகளைப் பற்றி விளக்கம் கேட்டு வர, கருத்து கேட்டு வர அனுப்பப் பட்டான். அனுப்பப்பட்ட அதே தூதுவனை, அதே அரசு அதே அரசப் படைகள் சுட்டுக் கொன்றன. ராஜீவ் காந்திப் படைதான் சுட்டுக்கொன்றது. சினிமாவிலெல்லாம் பார்த்திருக்கிறோம், கட்டபொம்மன் சொல்லுவான் தூதுவனாக வந்ததால் உன்னை உயிரோடு விடுகிறேன் எட்டப்பா என்று. இராமாயணத்தில் இராவணன் சொல்லுவான், அனுமா நீ தூதுவனாக வந்ததால் உயிரோடு விடுகிறேன் என்று. ஆனால் தூதுவனைக் கொன்ற துரோகி இராஜீவ் காந்தி. அது மட்டுமல்ல, அறநெறிக்குப் புறம்பாக என்பது சாதாரணமானது அல்ல.

இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படையின் தலைமைத் தளபதியாக இருந்த ஹர்சரத் சிங் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘இண்டர்வென்சன் ஆஃப் இந்தியா இன் சிறீலங்கா’ என்ற புத்தகம். அதில் பல செய்திகள் இருக்கின்றன. நாங்கள் கூட புத்தகம் போட்டு விற்றுக்கொண்டு இருக்கின்றோம், ‘ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?’ என்ற நூலை பெரியார் திராவிடர் கழகத் தோழர்.விடுதலை இராஜேந்திரன் எழுதிய நூல், அதை விற்றுக் கொண்டிருக்கிறோம். அதைப் படித்துப் பாருங்கள். அதில் பல செய்திகள், அதில் ஒன்று ஹர்சரத் சிங் அங்கு தலைமைத் தளபதியாக இருந்தபோது 1987-யில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கூறுகள் கூட நிறைவேற்றப்படவில்லை. அதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள், போராட்டம் தொடங்கவிருக்கிறார்கள். திலீபன் நாளை போராட்டம் தொடங்கப் போகிறார்.

அது குறித்து பிரபாகரனிடம் பேசுவதற்கு ஹர்சரத் சிங்விரும்புகிறார். பிரபாகரன் சந்திக்க இருக்கிறார். அப்போது இலங்கையிலிருந்த இந்தியத் தூதர் தீட்சித், ஹர்சரத் சிங்கிற்கு தொலைபேசியில் சொல்கிறான், ‘இன்று பேசவருகிற போது பிரபாகரனை சுட்டுவிடு’ என்று. அவர் மறுக்கிறார். ‘நான் அறநெறி பிறழாத இராணுவ வீரன், வெள்ளைக் கொடியின் கீழ் பேசுகிற போது சுடமுடியாது என்று சொல்கிறார். மீண்டும் கேட்கிறார். அதன்பின் தன்னுடைய தலைமை தளபதி திபீந்தர் சிங்கைக் கேட்கிறார். ‘மறுத்துவிடு என்று சொல்லிவிடு. அப்படியெல்லாம் அறநெறி பிறழ்ந்து செய்யமுடியாது’ என்று சொல்கிறார். மீண்டும் தீட்சித்துக்கு ‘முடியாது’ என்று சொல்கிறார்.

அப்போது தீட்சித் சொல்கிறான், ‘இதை நான் சொல்லவில்லை, தலைமை அமைச்சர் பிரதமர் ராஜீவ் காந்தி சொன்னது’ என்று. இதை தனது நூலில் எழுதி இருக்கிறார் ஹர்சரத் சிங். இந்த நாட்டின் படைத் தளபதி அப்போது நடந்த செய்தியை தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். அந்த நூல் இரண்டாண்டுகளாக இந்தியாவில் உலவுகிறது. அறநெறி பிறழ்ந்து உங்களை நம்பிப் பேச வந்தவனைச் சுடத் துணிந்த அயோக்கியன் இராஜீவ் காந்தி இல்லையா? அப்போது அந்தத் தளபதி இராஜீவ் சொல்லைக் கேட்டிருந்தால் பிரபாகரன் நமக்கு இல்லை; ஈழத்தமிழர்களுக்கு இல்லை. அப்படிப்பட்ட துரோகி அவன். ஒவ்வொன்றாக, தோழர் இராஜேந்திரன் சொன்னார். விமானம் ஓட்டிக்கொண்டிருந்தவன் நேரடியாக பதவிக்கு வந்து உட்காருகிறான். தன்னுடைய தாய், தனக்குப் பதவி வரக் காரணமாக இருந்தவள், அவரைக் கொல்லப்பட்டதற்கு அமைக்கப்பட்ட ஆணையம் பரிந்துரை செய்கிறது, ‘இவன் தான் காரனமாக இருக்கக் கூடும் விசாரிங்கள்’ என்று ஆர்.கே.தவானைக் காட்டுகிறது.

ஆனால் அவரை தனது கட்சிக்குப் பொது செயலாளராக நியமிக்கிறார் இராஜிவ் காந்தி. அதுமட்டும் இல்லை. இப்படிப்பட்ட ஆணையங்களின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்கவேண்டியதில்லை என்ற புதிய சட்டம் ஒன்றை அதற்காகக் கொண்டுவருகிறார். இப்படி தன் தாய்க்கே துரோகம் செய்த துரோகி அவன்.

ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு போனால், ஏராளமான குற்றச்சாட்டுகளைச் சொல்லலாம். அதுமட்டுமில்லை இங்கிருந்து அமைதிப் படையை அனுப்புகிறேன் என்று சொல்லி, எதிரிக்கும் எதிரிக்கும் உடன்பாடு பேசப்போன இவன் ஒரு உடன்பாடு போடுகிறான். இரண்டு பேரையும் உட்கார வைத்தா போட்டார்கள் உடன்பாட்டை? 1987 ஒப்பந்தத்தில் யார் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்? இந்தப் பக்கம் இலங்கை குடியரசுத் தலைவர் என்றால் அந்தப் பக்கம் பிரபாகரன் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். அப்படித்தானே நார்வே செய்தது. ஆனால் இராஜீவ் ஒரு பக்கம் கையெழுத்தாம் அவர் ஒரு பக்கம் கையெழுத்து போட்டு நிறைவேற்றி விட்டு அதில் சொன்னதைக் கூட நிறைவேற்றாமல், அமைதிப்படை என்ற பெயரால் அனுப்பப்பட்டது நம்முடைய தமிழர்களை தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பவர்களைக் கொல்வதற்கு.

1987-யில் போட்ட ஒப்பந்தத்தை சிவசங்கர மேனன் இலங்கைக்குப் போய்விட்டு இப்போது தான் பேசுகிறார். 1987 ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று 22 ஆண்டுகளுக்குப் பின்னாடி இப்ப கேட்டிருக்கிறார். கலைஞருக்கு 1985-யில் கொடுத்த பேட்டி இப்பொழுது நினைவிற்கு வந்ததைப் போல, 1987 ஒப்பந்தம் இப்பொழுது தான் இவர்களுக்கு நினைவிற்கு வந்திருக்கிறது. சரி அந்த ஒப்பந்ததைப் போட்டு அனுப்பினாயே, என்ன அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சியெடுத்துக் கொண்டாய்? ஒப்பதத்தின் கூறு இதுவரை ஏதாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒரே நிலப்பகுதியாக ஆக்கப்படவேண்டும் என்று ஒப்பந்தம் சொல்கிறது. அதை நிறைவேற்ற இந்தக் காங்கிரசு, இந்த இந்திய அரசு, அதற்காக ‘உயிர்தியாகம் செய்த’ ராஜீவ் காந்தியின் நினைவாக என்ன செய்திருக்கிறார்கள் இது வரை? இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல், இந்தியாவிற்கு எதிரானவர்களை கால் வைக்க விடமாட்டோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது சீன நாடு இலங்கையில் கால்வைத்து விட்டது. நீ கொடுத்த கட்சத்தீவில் வரலாம். ஏன் என்றால் இப்படித்தான் பர்மா/மியான்மருக்கு ஒரு தீவைக் கொடுத்தார்கள். கோகோ தீவு என்று ஒரு தீவு. அங்கே இப்போது அந்தமானுக்குப் பக்கத்தில் சீன நாட்டு கப்பற்படை வந்து அமர்ந்திருக்கிறது. அதுபோல் கட்சத்தீவிற்கு வராது என்று என்ன நிச்சயம்? இதுவரைக்கும் கேட்டிருக்கிறீர்களா?

இப்படிப்பட்ட துரோகங்களைப் புரிந்த அந்த ராஜீவ் காந்திக்கு நாட்டுப்பற்றுள்ள இந்தியன் யாராவது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். என் நாட்டின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவித்தாய், இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்தாய். இந்த நாட்டு பிற்படுத்தப்பட்டவர்களால் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். தாய், அறநெறி என்று பேசுபவன் எவனாவது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். நீ சதிகாரனாக, கொலைகாரனாக, கொலை செய்ய முயற்சித்திருக்கிறாய். நாம் செய்யத் தவறிய செயலை, ஒரு ஈழத்தமிழன் செய்திருக்கிறான் என்று வைத்துக்கொண்டால் அதற்காக மகிழ்ச்சியடைய வேண்டும், ஒரு ராஜீவ் காந்திக்கு இவர்களுக்கு இத்தனை ஏக்கம் வருகிறதே! ஆறாயிரம் ஈழத்தமிழர்களைக் கொன்றது யார், அமைதிப்படைதானே? ஆயிரம் பெண்களைக் கற்பழித்தவன் கொடுமைப்படுத்தியவன் கெடுத்தவன் யார், அமைதிப்படை தானே? வீதியில் படுக்க வைத்து மேலே டேங்கை ஓட்டினார்களே, துடிக்காதா நெஞ்சம்? ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் நியாயம், விடுதலைப் புலிகள் செய்யாமல் இருந்தால் குற்றம். செய்திருந்தால் பாராட்டுகிறோம், செய்யாமலிருந்திருந்தால் கண்டிக்கிறோம் என்று நாம் பேசியிருக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டில் முழங்கியிருக்கவேண்டிய கூற்று. நாம் துன்பியல் நாடகம், வருத்தப்படுகிறோம் என்று பேசி தவறு செய்துவிட்டோம். இந்தக் குற்றத்தைச் சொல்லிச் சொல்லித்தான் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் என்று காங்கிரஸ்காரன் சொல்கிறான்.

கலைஞருக்கு எவ்வளவு பெருந்தன்மை. இவர் மறப்போம் மன்னிப்போம், அவன் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம். தன்னுடைய மகன் ஸ்டாலினைக் காப்பாற்ற நெருக்கடி நிலையில் சிறையில் உயிர் கொடுத்த சிட்டிபாபு, பாலகிருஷ்ணன் செத்து இரண்டரை ஆண்டில் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தாரேப்பா, அந்தப் பெருந்தன்மை ஏன் காங்கிரசுக்காரனுக்கு வரவில்லை என்று கேட்கிறேன்.

இப்படிப்பட்ட அவர்களுடைய பொய்முகத்தை நாம் புரிந்தாக வேண்டும். ஆம், கொலை செய்திருந்தால் நியாயம். ஏனென்றால் அந்த ஒப்பந்தத்தை ஏற்று புதுமலையில் பிரபாகரன் சொன்னார், ‘ஆயுதங்களை ஒப்படைக்கிறோம், ஆயுதங்களை உங்கள் கையளித்த நிமிடத்திலிருந்து, ஈழத்தமிழர் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம். இந்திய அரசின் நேர்மையை நான் நம்புகிறேன்’ என்று சொன்னார். ஆனால் நீங்கள் நம்பிக்கை துரோகம் செய்தீர்களா இல்லையா?

தனது உயிருக்கு உயிரான மக்களைக் காப்பாற்ற ஆயுதம் எடுத்தார். ஆயுதம் எவன் எடுப்பான்? இரக்கம் மிகுந்தவன் தான் ஆயுதம் எடுப்பான். சாதாரண மனிதர்கள், ஒருவன் தாக்கப்பட்டால், அநியாயமாக உதைக்கப்பட்டால், இரக்கம் இருக்கிறவன் அக்கிரமம் என்று சொல்லிவிட்டு போய்விடுவான். மீறிப்போனால் கண்ணீர் விடுவான். இவன் சாதாரண இரக்கம் உள்ளவன். இரக்கம் மிகுந்தவன் தான் தட்டிக்கேட்கப் போவான், தடுக்கப் போவான், மீறிப்போனால் ஆயுதம் எடுத்தாவது போராடுவான். அது தான் முத்துக்குமார் சொன்னார், அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார், மறத்திற்கும் அஃதே துணை என்று சொன்னார். முத்துக்குமார் தனது கடிதத்தில் ‘அறத்திற்கே அன்பு சார்பென்ப’ என்று திருக்குறளை நினைவூட்டுகிறார். வள்ளுவரே சொல்லியிருக்காரப்பா, அறத்திற்கே அன்பு சார்ப என்ப அறியார், மறத்திற்கும்-விடுதலைப்புலிகள் போராட்டத்திற்கும் அன்பு தான் காரணம் என்று. அவர்கள் இரக்கம் மிகுந்த காரணத்தால் ஆயுதம் எடுத்துப் போராடுகிறார்கள்.

எனவே அந்தப் போராளிகளினுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்து, தங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கிற தங்கள் மக்களை காப்பதற்கு, கையில் வைத்திருந்த ஆயுதத்தை உன் நேர்மையின் மீது நம்பிக்கை வைத்து ஒப்படைக்கிறோம் என்று சொல்லிவிட்டு கொடுத்த அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்த துரோகியல்லவா!

இந்திய மண்ணில் வந்து கொலை செய்யலாமா? காங்கிரஸ்காரன் கேட்கிறான். இலங்கை கப்பற்படை வீரன் இராஜீவை அடித்தானே, ஒருவேளை ஓங்கி அடித்திருந்தால், செத்துப் போயிருப்பான். அந்த கப்பற்படை வீரனிடம் கேட்டபோது, அவன் சொன்னான், ‘நான் துடைப்பத்தில் அடிக்கவேண்டுமென்று கருதினேன், கெட்ட வாய்ப்பாக என் கையில் துப்பாக்கியிருந்தது’ என்று.

காங்கிரசுக்காரன் வாதத்தைச் சொல்கிறோம், ‘நான் ஆயுதம் கொடுக்கவில்லையென்றால் அவன் ஆயுதம் கொடுப்பான்’ என்று சொல்கிறானே, ‘நாங்கள் கொல்லாட்டி பஞ்சாப்காரன் கொன்றிருப்பான், அப்ப நாங்கள் செஞ்சது தப்பில்லை’ என்று சொன்னால் ஒத்துக்கொள்வானா அவன்? இப்படிப்பட்ட சொத்தை வாதங்களை வைத்து நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காங்கிரசுக்காரர்கள் இந்த மண்ணில் இருக்கக் கூடாது. இருக்கக் கூடாது என்றால் ஆட்சியில், பதவியில் எந்த இடத்திலும் இருக்கவிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்தாக நாங்கள் மூன்று இயக்கங்களும் இப்பொழுதைக்கு இணைந்து இருக்கிறோம்.

ஆனால் தொடர்ந்து ஈழத்தமிழர் ஆதரவு என்ற முழக்கம் போதாது. ஈழத்தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் எப்படி வேண்டுமானால் இருக்கட்டும். எப்படி அவர்களைப் பாதுகாக்க முடியும்? பாதுகாக்க வானத்திலிருந்து கடவுள் வருவாரா? தேவதூதன் வந்து காப்பாற்றுவானா? அவர்களைப் பாதுகாப்பதற்கு பலமான பாதுகாப்புக் கவசம் வேண்டும். அமைதியான ஒரு நாடாக இருந்திருந்தால் ஒரு கட்சி ஒரு இயக்கம் போதும். ஆயுதம் கொண்டு தாக்கப்படும்போது, ஆயுதம் கொண்டு பாதுகாக்கின்ற ஒரு இயக்கம் தான் வேண்டும். அதற்குச் சரியான இயக்கமாக தொடர்ந்து போராடுகிற இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் தான் இருக்கிறது. ஈழத்தமிழர் ஆதரவு என்பதற்குச் சரியான பொருள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என்பதுதான். நாம் அஞ்சியஞ்சிச் சொல்லி இனி பயன் இல்லை. அவர்களையும் ஆதரிக்க வேண்டும். ஆதரிப்பது இருக்கட்டும், அவர்கள் மீது தேவையில்லாமல் விதிக்கப்பட்டிருக்கும் தடை நீக்கப்படவேண்டும் என்பது முழக்கமாக இருக்கவேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று முழங்க வேண்டும்.

சிங்களவனுக்கு அநியாயமாக ஆயுதங்கள் கொடுக்கின்ற இந்திய அரசு எங்கள் அரசாக இருக்குமா என்ற அய்யம் வரவேண்டும், அய்யம் வந்தால் தான் முடிவுக்கு நாம் வரமுடியும். நம்ம நாடாக இருந்தால் கொடுப்பானா என்று சந்தேகிக்க வேண்டும். சந்தேகிப்பதற்கு ஆயிரம் காரணம் இருக்கிறது. பக்கத்து நாடான வங்க நாட்டில் நடந்த விடுதலைப் போருக்கு பாகிஸ்தானிலிருந்து பிரித்து நாடு கொடுக்க இந்திரா காந்தி யுத்தம் தொடுத்தார்கள். அந்த நாட்டில் போராட்டம் நடந்த போது அங்கிருந்த சில மக்கள் அகதிகளாக இங்கு வந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்காக இந்த இந்திய அரசு நாம் எழுதிய ஒவ்வொரு கடிதத்திற்கும் அய்ந்து காசு வசூலித்தது. பலருக்கு நினைவிருக்கலாம். 15 காசு அஞ்சலட்டைக்கு கூடுதலாக 5 காசு அஞ்சல் வில்லை ஒட்டவேண்டும். Refugee Relief Fund என்று தனியாக ஒரு முத்திரை ஒட்டவேண்டும் என்று வைத்திருந்தார்கள். நமக்கு எழுதுகிற கடிதத்திற்கெல்லாம் 25 விழுக்காடு நாம் அவர்களுக்காக நாம் பணம் செலுத்தினோம். யாருக்கு? இன்னொரு நாட்டிலிருந்து இந்த நாட்டிற்கு அகதிகளாக வந்தவர்களுக்காக இந்திய அரசு நம்மிடம் வசூலித்தது.

நமது தமிழக முதல்வராக அப்போது இருந்த கலைஞர், 6 கோடி ரூபாய் நிதியை வங்க அகதிகள் உதவிக்காக திரட்டிக் கொடுத்தார், தமிழ்நாட்டிலிருந்து. எழுபதுகளில் ஒரு பவுன் 150 ரூபாய்; இன்றைக்கு 10,000 க்கும் மேலே. கணக்குப் போடுங்கள் அப்போது 6 கோடி என்றால் இப்போது 100 கோடி ரூபாயுக்கும் மேல். குஜராத்தில் பூகம்பம், தமிழ்நாட்டிலிருந்து நிதி போனது. நம்முடைய இரத்த உறவு ஈழத்தமிழனுக்காக நிதி திரட்டியபோது எத்தனை வெளிநாட்டுக்காரன், வேறு மாநிலத்துக்காரன் பணம் கொடுத்திருக்கிறான். எங்களுக்கு அய்யம் வராதா? நாங்கள் வேறு அவர்கள் வேறு என்ற சிந்தனை வராதா? இந்த இந்திய அரசு என்ன முயற்சியை செய்திருக்கிறது? அந்த வங்க அகதிகளுக்காக அத்தனை உதவி செய்தவன் ஈழத் தமிழ் அகதிகளுக்கு என்ன செய்தான்?

நான் கர்நாடக எல்லையில் இருக்கிறவன். ஒரு 50 கி.மீ அந்தப் பக்கம் போனால் திபெத்திய அகதிமுகாம் இருக்கிறது. அழகான வண்ணம் பூசப்பட்ட நிரந்தர கட்டிடங்கள், கான்கிரீட் கட்டிடத்தில் வங்கிகள் இருக்கிறது, விளையாட்டுத்திடல் இருக்கிறது. 5000 ஏக்கர் அவர்களுக்கு ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது. அந்த முகாமுக்குள் காவல்துறையை அவர்கள் அனுமதிப்பதில்லை. போகிற நமக்கெல்லாம் ஒரு மதுவைக் கொடுக்கிறார்கள். அவர்கள் பாணியில் அவர்கள் செய்து காய்ச்சிய மதுவை கொடுக்கிறார்கள். மதுவை விருப்பமானவர்கள் குடிக்கிறார்கள். அதைத் தடுப்பதற்கு, பார்ப்பதற்கு காவல்துறை அந்த முகாமுக்குள் நுழைந்துவிட முடியாது. அதே நாடு தானே, அவன் திபெத்தியன் கர்நாடகத்தில் இருக்கிறான். என் தமிழன் தமிழ்நாட்டில் வந்து இருக்கிறான். அந்த அகதி முகாமுக்குள் நாம் உள்ளே நுழைய முடியுமா? நாம் பார்க்கப் போக முடியுமா? எத்தனைக் கொடுமை?

Rajiv Gandhi ஈழத்தமிழர்களுக்கு செங்கல்பட்டு முகம் என்ற சிறப்பு முகாம் ஒன்று இருக்கிறது. பல பேருக்குத் தெரிந்து இருக்காது. நமது மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் துவக்கி வைத்தது 1990-யில். குற்றமே செய்யாத ஈழத்தமிழனை ‘புலிகள்’ என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்து வைப்பதற்குத்தான் தான் அந்த முகாம். 180 பேர் கடந்த ஆட்சியின் போது இருந்தார்கள். இந்தக் கொடுமைக்கார ஜெயலலிதா 6 ஆகக் குறைத்தார் அந்த முகாமில் இருப்பவர்களை. இப்பொழுது திரும்ப 87 ஆகிவிட்டது. அவர்களைப் பார்க்க குடும்ப உறவுகள், மனைவி வந்தால் பார்க்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள். அவர்களிலும் 18 பேர் விடுதலைப் புலிகள் என்று வேறு இடத்தில போட்டாச்சு. மீதியிருக்கிற 65 பேரைப் பார்க்கப் போகிற மனைவிகள், குழந்தைகள் மாதம் ஒருமுறை வந்து பார்த்துவிட்டுப் போகலாம். வெளிக்காற்றைச் சுவாசித்து 5 ஆண்டுகள் 6 ஆண்டுகள் ஆனவர்கள் எல்லாம் அங்கேயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கொடுமைகள் நம் சொந்தங்களுக்கு நடக்கிற போது, அதைச் செய்யச் சொல்லி நிர்பந்திக்கிற போது நாம் யோசிக்கிறோம், இது நம் அரசாக இருக்க முடியுமா? நமக்கு அய்யம் வருகிறதல்லவா? இதை நாம் எப்படி வெளிக்காட்டப் போகிறோம்.

ஏற்கனவே சொன்னேன், வெளிநாட்டுக்காரன் நம்நாட்டில் வந்து கொலை பண்ணலாமா என்று கேட்கிறான். இதற்கொரு எடுத்துக்காட்டைச் சொல்லவேண்டும். இந்த நாட்டில் ஒரு கொடுமை நடந்தது, ஜாலியன் வாலாபாக் படிகொலை. 1919-யில் 300க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதாக ஆங்கிலேயன் சொன்னான், நாம் ஆயிரம் பேர் என்று சொன்னோம். அதைச் செய்தவனைக் கொல்லவேண்டும் என்று இந்த நாட்டு இளைஞன் அப்போது நினைத்தான். ‘அவனை விடக் கூடாது என் நாட்டில் கொடுமைச் செயல் புரிந்தவனைக் கொல்லாமல் விடமாட்டேன்’ என்று 1919-யில் செய்த குற்றத்திற்காக, 1940-யில் இங்கிலாந்தில் போய், அங்கே ஒரு விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் போய் டயரைச் சுட்டுக் கொன்றான் உத்தம் சிங்.

அங்கே போய் உத்தம்சிங் சுட்டது, ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கியில் சுட்ட டயரை அல்ல, அதாவது ஜெனரல் டயர் இல்லை. நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். சுட ஆணையிட்டவனின் பெயரும் டயர்தான். அதாவது மைக்கேல் டயர். நல்ல எலெக்ட்ரீசியனாக இருந்தால் ஷாக் அடிக்கிற போது சுவிட்சை ஆஃப் பண்ண மாட்டான், மெயினைத் தான் போய் ஆஃப் பண்ணு என்பான். அதுபோல மெயினை ஆஃப் பண்ணினான். உத்தரவு போட்டவனை போய்க்கொன்றான். சுட்டவன் என்ன பண்ணுவான் பாவம், எய்தவன் இருக்க அம்பை ஏன் நோக வேண்டும்? அதனால் எய்தவனைப் போய்க் கொன்றான். அதற்கு ஆணையிட்ட கவர்னரைத்தான் கொன்றான்.

21 ஆண்டுகள் கழித்து இங்கிலந்து மண்ணில் போய் இந்தியாவில் செய்த குற்றத்திற்காக கொலை செய்தான். அவனைப் பாராட்டுகிறது நம் இந்திய நாடு. 40-யில் அடக்கம் செய்யப்பட்ட அவனது உடலை 1974-யில் எடுத்துக்கொண்டு வந்தார்கள். மிச்சங்களை, எச்சங்களை மீதியிருந்த பகுதிகளை இந்தியாவிற்குக் கொண்டு வந்தார்கள்.

கொண்டு வந்த மிச்சங்களை வரவேற்கப் போனவர்கள் யார் தெரியுமா? அப்போது காங்கிரசு தலைவராக இருந்த, பின்னால் குடியரசுத் தலைவரான சங்கர் தயாள் சர்மா வரவேற்கப் போனார். அப்போது பஞ்சாப் முதல்வராக இருந்த, பின்னால் குடியரசுத் தலைவரான ஜெயில் சிங் வரவேற்கப் போனார். அந்த எச்சங்கள் அடங்கிய பெட்டிக்கு மலர்வளையம் வைத்தவர் யார் தெரியுமா? இந்திய நாட்டின் தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி. இந்த நாட்டில் நடந்த குற்றத்திற்காக அடுத்த நாட்டில் 21 ஆண்டுகள் கழித்து கொலை செய்தவனைத் தியாகி என்று நீங்கள் பாராட்டலாம். ஈழத்தில் 6000, 7000 பேரைக் கொன்றவனை ஆயிரம் பெண்களைக் கெடுக்கப்பட்டதற்குக் காரணமானவனை, உத்தம்சிங் போல் ஈழத்தமிழன் எவனாவது சுட்டுக் கொல்கிறான். உங்கள் நியாயத்தின் படி இது நியாயம் தானே. உனக்கு அவன் தியாகி தானே. எப்படி அவனைக் குற்றவாளி என்று சொல்கிறீர்கள்?

அதனால்தான் சொன்னேன் ஈழத்தமிழனென்றாலும் எவனாக இருந்தாலும் அதை செய்திருக்க வேண்டும். நல்லது தான். புலிகள் செய்யாமல் இருந்திருந்தால் குற்றம் என்று சொல்கிறோம். ஏனென்றால் அவர்களுக்கானவர்கள் நீங்கள் தான். அவர்களுக்குப் பாதுகாப்பானவர்கள் நீங்கள் தான். புலிகள் செய்யாமல் இருந்தால் கண்டிக்க வேண்டும். இந்த நிலைப்பாடை நாம் எடுக்க வேண்டும். இந்த நிலையில் தான் ஏற்கனவே சொன்னேன். அவர்கள் எல்லாம் நம்மை தமிழனென்று மதிக்கவில்லை. அவன் பாதிக்கப்பட்ட போது நாம் நிதி அனுப்பினோம், நமக்கு அவன் அனுப்ப மாட்டான். நாட்டில் எது நடந்தாலும் தமிழர்களாகிய நாம் இந்தியர்கள் என்று கருதிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்தியாவில் இருக்கும் வேறு எவனும் அகில இந்தியா பேசுகிறவன் கூட அவனை அவன் தேசிய இனத்தின் பெயரில் தான் இனம்காண்கிறான். நான் இந்திக்காரன், நான் பெங்காளி. அதனால் தான் காங்கிரசு கட்சியினுடைய முதல்வராக இருந்த சித்தார்த்த சங்கர் ரே வங்க தேசத்தில், தன் மொழி பேசுகிற மக்கள் பாதிக்கப்பட்ட போது அவன் சொன்னான், ‘இந்திராவே நீ படை அனுப்புகிறாயா, நான் என் மாநிலத்தின் ரிசர்வ் போலீசை அனுப்பச் சொல்லவா’ என்று. டாக்டர் சித்தார்த்த சங்கர் ரே அகில இந்திய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். அவனும் நம்மை மாதிரி மாநிலக் கட்சியைச் சார்ந்தவன் அல்ல. அகில இந்திய கட்சியில் இருக்கிற இன உணர்வு ஏன் நமக்கு இல்லை?

1972-யில் செல்வா தமிழ்நாடு வந்தார். பெரியாரிடம் தனது திட்டங்களைப் பற்றிச் சொல்லி ஆதரவு கேட்டார். அந்த நாட்டு மக்கள் தலைவர் செல்வநாயகத்துக்கு நமது தலைவர் சொன்ன பதில் ‘ஓர் அடிமைக்கு எப்படி இன்னோர் அடிமை எப்படி உதவ முடியும்?’. நாம் அடிமைகளாக இருக்காமல் இருந்தால் தான் அவர்களுக்கு உதவ முடியும். நாம் அடிமைகளாக இல்லாமல் இருப்பதற்கு என்ன முயற்சி செய்திருக்கிறோம் இது வரை? இனிமேலாவது செய்வோம் என்று சொல்லி கேட்டுக்கொள்வது தான் நமது கோரிக்கை.

நான் கூட தோழர் கிட்டே பேசினேன், ஐ.நா மன்றம் சொல்லியிருக்கிறது, ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு. எனவே இங்கிருக்கிற வழக்கறிஞர்கள் வழக்காடலாம், ஐ.நாவின் பிரகடனத்தை நிறைவேற்று, தமிழ்நாட்டுத் தமிழனிடம் வாக்கெடுப்பு நடத்து. நீ இந்தியாவில் தொடர்ந்து இருக்க விரும்புகிறாயா, இல்லையா? ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம். வழக்கு போடுவோம். அல்லது லயோலா கல்லூரியைச் சேர்ந்த பேரா.ராஜநாயகத்தைக் கேட்டுக் கொள்வோம், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்துங்கள். இப்படிப்பட்ட இந்திய அரசோடு இணைந்து இருக்க தமிழர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதைத் தெரிந்தாவது வெளியிடுங்கள். தெரியட்டும் அப்பொழுதாவது தெரியட்டும்.

1947-யில் பாகிஸ்தான் காஷ்மீருக்குள் வந்தபோது, ‘அவர்கள் இந்தியாவோடு இருக்க விரும்புகிறார்களா, பாகிஸ்தானுடன் இருக்க விரும்புகிறார்களா, தனிநாடாக இருக்க விரும்புகிறார்களா? வாக்கெடுப்பு நடத்துங்கள்’ என்று ஐ.நா மன்றம் இந்தியாவிடம் சொன்னது. 1949, ஜனவரி-1-யில் நடத்தவேண்டிய வாக்கெடுப்பை 60 ஆண்டுகாலமாக நடத்தவே இல்லை இந்திய அரசு. இதற்கு மேலே நடத்திடவா போகிறது? நாம் நடத்தியாவது அறிவிப்போம். நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம்.

சத்தியமூர்த்தியைக் குறித்து குத்தூசி குருசாமி ‘அழுகிய முட்டை அரையணாவிற்கு ஆறு’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். ‘தோழர்களே முட்டையால் அடிப்பதால் மனிதன் சாகமாட்டான். அதற்காக முட்டையை வீணாக்காதீர்கள். அது சத்துள்ள உணவு. அழுகிய முட்டையைப் பயன்படுத்தலாம் அரையணாவிற்கு ஆறு என்று நினைத்துவிடாதே, வேண்டாம். யார் மீது வீசினாலும் சத்தியமூர்த்தி மீது வீசாதீர்கள்’ என்று எழுதினார்கள். அடுத்த வாரமே சத்தியமூர்த்தி மீது அடித்தார்கள். எத்தனையோ போராட்ட முறைகள் இருக்கின்றன. காங்கிரசுகாரன் போகிறபோது, ‘அதோ காங்கிரசுகாரன் போறாங்’கிறது கூட ஒரு போராட்டம்தான். அவனை அவமானப்படுத்த வேண்டும். வெட்கப்படவேண்டும் வீதியில் நடப்பதற்கு. எத்தனையோ போராட்ட முறை எதிர்ப்புகளைப் பண்ணுவோம். எதிர்ப்புகளைக் காட்டுகிற புதுவழியாக நாங்கள் 20-ஆம் தேதி நடத்தவிருக்கிற மத்திய அரசின் அலுவலகங்களை இழுத்துப் பூட்டுவது என்ற போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள்.

(15.02.2009 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற மாவீரன் தோழர் முத்துக்குமாரின் வீரவணக்கக் கூட்டத்தில் கொளத்துார் மணி அவர்கள் ஆற்றிய உரை)

Friday, 2 November 2012

தந்தை பெரியாரின் புகைப்படங்கள்




பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா?

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா?
அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்.
எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக் கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.
பெட்ரோல் வணிகத்தில் வெப்பஅளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.
அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும்போதுதான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்.

செல்போன் : நன்மைகள் அதிகம். தீமை என்று சொன்னால், உயிரை இழக்க நேரிடும். அவ்வளவுதான்.

“இனி எதிர்காலத்தில்,
ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும்
ஒரு தந்திக் கருவி இருக்கும்.”
1930 களில், இத்தகைய புரட்சிக் கருத்தை வெளிப்படுத்தியவர் யார் தெரியுமா?
ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டு அறிஞர் என்று கருதி விடாதீர்கள்.
இது நமது தமிழ் மண்ணின் சிந்தனைதான்; தந்தை பெரியார் எனும் தத்துவமேதை, தொலைநோக்குப் பார்வையோடு, இயல்பாக வெளிப்படுத்திய கருத்து இது.
ஏறத்தாழ, எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, யாரும் சிந்திக்க முடியாத கோணத்தில் சிந்தித்து, அவர் குறிப்பிட்ட அந்தத் தந்திக் கருவிதான், இன்று உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டு இருக்கின்ற அலைபேசி.
அவர் எந்த ஆங்கில நூலையும் படித்து விட்டு இந்தக் கருத்தைச் சொல்லவில்லை. தமக்குச் சரி என்று பட்டதையெல்லாம் பேசினார். அவரது உரைகளைப் படித்துப் பார்த்தால், அதை உணரலாம். 
இன்று, இந்திய மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அலைபேசிகள், இந்தியாவில் புழக்கத்தில் இருக்கின்றனவாம். இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முதல் பத்து ஆண்டுகளில், அலைபேசிகள் ஏற்படுத்தி இருக்கின்ற மாற்றங்கள், இனி இந்த நூற்றாண்டு எத்தகைய புரட்சிகளைக் காண இருக்கின்றது என்பதற்குக் கட்டியம் கூறுகின்றது.
mobile_phones_380‘செல்போன், மொபைல் என்ற ஆங்கிலச் சொற்களுக்கு, ‘செல்,பேசி, செல்பேசி, செல்லிடபேசி அலைபேசி’ என, தமிழில் பல சொற்களைச் சொல்லுகிறார்கள். வான் அலைகளின் வழியாகப் பேசுவதால், ‘அலைபேசி’ என்பதுதான் ஓரளவு பொருத்தமாகத் தெரிகின்றது. மேலும் ஆய்வு செய்ய வேண்டும். இந்தக் கட்டுரையில், ‘அலைபேசி’ என்றே குறிப்பிட்டு உள்ளேன்.
அலைபேசிகளை முறையாகப் பயன்படுத்தினால், அது நம்மை முன்னேற்றும்;  வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்; தவறாகப் பயன்படுத்தினால், சிறைக்கூடத்துக்கு உள்ளே கொண்டு போய்ப் பூட்டி விடும். அன்றாடம் நாளிதழ்களில் நாம் படிக்கின்ற செய்திகள் அதை உணர்த்துகின்றன.
அலைபேசிகளால் கிடைக்கின்ற நன்மைகள் அதிகம். தீமை என்று சொன்னால், உயிரை இழக்க நேரிடும். அவ்வளவுதான்.
நம் கண்முன்னேயே சிட்டுக்குருவிகள் காணாமல் மறைந்து போனதற்கு, அலைபேசி கோபுரங்களின் மின்காந்த அலைவீச்சுதான் காரணம் என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. நமது உடல்நலத்துக்கும், மனநலத்துக்கும் அலைபேசிகள் ஏற்படுத்துகின்ற கேடுகள் கொஞ்சநஞ்சம் அல்ல.
எனவே, அலைபேசிகளை முறையாகப் பயன்படுத்துவதற்கு உதவியாக, சில கருத்துகளை, உங்கள் கவனத்துக்கு முன்வைக்கின்றேன்.
1. அலைபேசிகளை எப்போதும் கைகளிலேயே வைத்துக் கொண்டு இருக்காதீர்கள். அவை, வானொலி மற்றும் மின்காந்த அலைகளை, உங்களை நோக்கி ஈர்க்கின்றன. அதனால், கை விரல் கைநரம்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும். சில ஆண்டுகளில் கை நடுக்கம் ஏற்பட்டு விடும். எதையும் உறுதியாகப் பற்றிப் பிடிக்க முடியாமற் போய்விடும். அலைபேசியை  இயக்கும்போதும், அணைத்து வைக்கும்போதும், அதற்கான பொத்தானை அழுத்தியபின்பு, உடனே கீழே வைத்து விடுங்கள். அந்த வேளையில்தான், கதிர் வீச்சு கூடுதலாக இருக்கும். இணைப்பு கிடைத்தபிறகு, கையில் எடுத்துப் பேசுங்கள்.
அலுவலகத்திலும், வீட்டிலும் இருக்கும்போது, கூடியவரையிலும், கைக்கு எட்டுகின்ற தொலைவில், இரண்டு அடிகள் தள்ளியே  வைத்து இருங்கள். பேசும்போது மட்டும் உங்கள் கைகளில் இருந்தால் போதும்.
2. ஒரு எண்ணைச் சுழற்றிவிட்டு, எதிர்முனைக்கு சத்தம் போகிறதா? என்று கேட்டுக் கொண்டே இருப்பது தவறு. ஏனெனில், அடுத்த தொலைபேசிக்கு அழைப்பு செல்லும்போதுதான், கதிர்வீச்சு, மற்றும் மின்காந்த அதிர்வுகள் கூடுதலாக இருக்கும். அது உங்கள் காதுகளையும், மூளையையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே, எண்களைச் சுழற்றியபின், அலைபேசியை உங்கள் கண்ணுக்கு முன்னே கொண்டு வந்து, இணைப்பு கிடைக்கிறதா என்பதைத் திரையில் பார்த்துவிட்டு, அதன்பிறகு உரையாடலைத் தொடங்குங்கள்.
3. இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்குத் தெரிந்து இருக்கும். இந்தச் செய்தியைப் படித்து இருப்பார்கள்; படத்தைப் பார்த்து இருப்பார்கள். ஒரு சோதனை: இரண்டு அலைபேசிகளை மின்னூட்டம் செய்யும்போதும், பேசும்போதும், அவற்றுக்கு இடையில் ஒரு முட்டையை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்தில், அந்த முட்டை வெந்து விடும்; நீங்கள் எடுத்துச் சாப்பிடலாம். அந்த அளவுக்கு அதில் அதிர்வும், வெப்பமும் உண்டாகிறது.
4. எனவே, சுருக்கமாக உரையாடுங்கள். ‘என்ன? ஏது?’ என்று கேட்டு, இரண்டு நிமிடங்களுக்குள் உரையாடலை முடித்துக் கொள்ளுங்கள்.  ஆகக்கூடுதலாக, ஒரு அழைப்பில், ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசாதீர்கள். அதிலும் கூடுதலாக, கட்டாயத் தேவை என்றால், தொடர்ச்சியாக 17 நிமிடங்களுக்கு மேல் பேசாதீர்கள்.  மேலும் தேவை என்றால், 15 நிமிடங்கள் இடைவெளி விட்டுப் பேசுங்கள். பேசும்போது, அலைபேசி உங்கள் காதுகளிலேயே ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டியது இல்லை. அதில் உள்ள ஒலிபெருக்கியை இயக்கி, சற்றுத் தள்ளி வைத்துக் கொண்டே கேளுங்கள்; பதில் சொல்லுங்கள்.
5. வீண் பேச்சு,வினையாகி விடும். உங்கள் நேரத்தைச் சேமியுங்கள்.
6. உங்கள் நண்பர், வேறு ஒரு நண்பருடைய அலைபேசி, தொலைபேசி எண்களைக் கேட்டால், ஆங்கிலத்தில் சொல்லாதீர்கள். அது உடனே புரியாது. தமிழில் சொல்லிப் பாருங்கள். எதிர்முனையில் கேட்பவர்களுக்குச் சட்டெனப் புரிந்து விடும்.  எண்களைச் சொல்லும்போது, “நீங்கள் சொல்வது கேட்கவில்லை; சத்தமாக இருக்கிறது , ஒரே இரைச்சலாக இருக்கின்றது; திரும்பச் சொல்லுங்கள்” என்றெல்லாம் மாறிமாறிக் கேட்பார்கள். எரிச்சலாக இருக்கும். எனவே,  எண்களைச் சொல்லிக் கொண்டே இருப்பதைவிட, தொலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரிகளை, குறுஞ்செய்திகளாகவே எழுதி, சரிபார்த்து அனுப்பி விடுங்கள். பிரச்சினை வராது.  நான் யாருக்கும் தொலைபேசி எண்களைச் சொல்லுவது இல்லை. எல்லாமே குறுஞ்செய்திதான்.
7. அலைபேசியில் ஏதேனும் பிரச்சினை என்றால், அதுவரை நீங்கள் சேமித்து வைத்து இருந்த நூற்றுக்கணக்கான எண்களையும் இழக்க நேரிடும். எனவே, உங்களுடைய தொடர்பு எண்களை, ஒரு குறிப்பு ஏட்டில் தனியாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சிறிய குறிப்பு ஏடுகளில் அல்ல; அதுவும் தொலைந்து விடக்கூடும்; எனவே பெரிய டைரியில் பதிவு செய்து, அதை வீட்டில் ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். அதில் தொடர்ந்து புதிய எண்களையும் பதிவு செய்து கொண்டே வாருங்கள். வெளியே எடுத்துக் கொண்டு போக வேண்டுமானால், அதற்கெனத் தனியாக இன்னொரு கையேட்டை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
8. ‘வண்டி ஓட்டும்போது, அலைபேசி அழைப்புக்குப் பதில் சொல்ல முனையாதீர்கள். அழைப்பது எமனாகவும் இருக்கலாம்.’ சென்னை மாநகரின் பொது இடங்களில் ஆங்காங்கே காணப்படுகின்ற போக்குவரத்து காவல்துறையினரின் விளம்பர வரிகள் இவை. ஆம்; ஒரு மாதத்துக்கு முன்பு, தமிழக அமைச்சர் ஒருவரின் மகன், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அருகில், அலைபேசியில் பேசிக்கொண்டே, 500 சிசி ரேஸ் பைக் ஓட்டிக்கொண்டு வேகமாக வந்தபோது, வேகத்தடையில் மோதி விழுந்தார்; மண்டை உடைந்து, உயிர் இழந்தார். அமைச்சரின் வேதனையில் நாமும் பங்கு கொள்கிறோம். ஒரு எடுத்துக்காட்டுக்காகத்தான், இதைக் குறிப்பிட்டேன்.
இதுமட்டும் அல்ல; கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், சென்னை மாநகரில், அலைபேசியில் பேசிக்கொண்டே, பாட்டு கேட்டுக் கொண்டே தண்டவாளத்தைக் கடந்தவர்கள், சாலையைக் கடந்தவர்கள் என 750 பேர்களுக்கும் மேற்பட்டவர்கள், மின்தொடர்வண்டியிலும், பேருந்துகளிலும் அடிபட்டு, உடல் சிதறி உருத்தெரியாமல் போய்விட்டார்கள் என, காவல்துறை அறிக்கை எச்சரிக்கின்றது. அதுமட்டும் அல்ல, நிறைய இளைஞர்கள், வண்டி ஓட்டிக் கொண்டே பேசிச் சென்றதால், விபத்தில் சிக்கி எலும்பு முறிவு சிகிச்சை பெற்றுக் கொண்டு இருக்கின்றார்கள். காரணம், பின்னால் வந்த வண்டிகள் எழுப்புகின்ற ஒலியைக் கேட்க முடியாமல் போய்விட்டது. மருத்துவமனைக்குச் சென்று பாருங்கள். இலட்சக்கணக்கில் செலவு; உடல் நலத்துக்கும் பெருங்கேடு. இவர்களுக்கு உயிரைவிட, பாட்டுதான் பெரிதாகத் தெரிகிறது. அந்த அளவுக்கு உழைத்துக் களைத்து விட்டார்கள்.
அலைபேசிகளில் நீண்ட நேரம் பாடல்களையும், வானொலி நிகழ்ச்சிகளையும் கேட்பவர்கள், தாமாக சிந்திக்கும் திறனை இழந்து விடுகின்றார்கள்.
“தஞ்சை மாவட்டத்தில் அலைபேசியில் பேசிக்கொண்டே பள்ளி வேனை ஓட்டியவர், குளத்துக்குள் வண்டியை விட்டார். ஒன்பது குழந்தைகள் சாவு; சில குழந்தைகளைக் காப்பாற்றிய ஆசிரியையும் தண்ணீருக்குள் மூழ்கிச் சாவு;
அரசுப் பேருந்து ஓட்டுநர், சென்னை அண்ணா சாலை, அண்ணா மேம்பாலத்தில், அலைபேசியில் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டியதால், சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு பேருந்து கீழே விழுந்தது.”
இந்தச் செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்து வேதனைப்பட்டோம். இறந்த குழந்தைகளுக்காக இரங்கல் தெரிவித்தோம்; கண்ணீர் சிந்தினோம் கவலைப்பட்டோம். காயப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினோம்.  இதுபோல, உங்கள் ஊரில் அலைபேசிகளால் பல விபத்துகள் ஏற்பட்டு  இருப்பதையும், உங்களுக்கு வேண்டிய நண்பர்கள், உறவினர்கள் இறந்து போயிருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த வலியையும் உணர்வீர்கள்.
இவையெல்லாம், சில செய்தித்துளிகள்தாம். தமிழகத்தில் அலைபேசிகளால் இறந்தவர்கள் எத்தனை பேர்? எப்படி? என்று யாரேனும் ஒருவர், பல்கலைக்கழக முனைவர் பட்டத்துக்காக ஆய்வுகளை மேற்கொண்டு, அதை நூலாகத் தொகுத்து வெளியிட்டால், அது இந்த சமுதாயத்துக்குச் செய்யும் பேருதவி ஆகும். 
9.வண்டி ஓட்டும்போது, நமக்கு வருகின்ற அழைப்பைத் தவிர்ப்பது மட்டும் போதாது. நீங்கள் ஒருவரை அழைக்கும்போது, அவர் உங்களோடு பேசத் தொடங்கும்போது, காற்று மோதுவதால் ஏற்படுகின்ற இரைச்சல் சத்தம் கேட்டால், ‘வண்டி ஓட்டிக் கொண்டு இருக்கின்றீர்களா?’ என்று கேளுங்கள்.‘பரவாயில்லை, சொல்லுங்கள்’ என்று அவர் சொன்னால், ‘நான் பிறகு பேசுகிறேன்’ என்று சொல்லிவிட்டு, உடனே தொடர்பைத் துண்டித்து விடுங்கள். நீங்கள் அவருக்கு எமனாக மாறி விடாதீர்கள்.
நீங்கள் வண்டி ஓட்டத் தொடங்குவதற்கு முன்பு, அலைபேசியை பெட்டிக்குள் போட்டுப் பூட்டி விடுங்கள். இல்லையேல், கண்டிப்பாக எடுத்துப் பேசத் தூண்டும். கவனம் சிதறாமல், சாலையைக் கவனித்து ஓட்டுங்கள். உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும்.
சென்னையில், போக்குவரத்துக் காவலர்கள், வண்டிகளை நிறுத்தி, ‘குடித்து இருக்கின்றார்களா? ஓட்டுநர் உரிமம் வைத்து இருக்கின்றார்களா?’ என்று மட்டும்தான் சரி பார்க்கின்றார்களே தவிர, இரண்டு காதுகளிலும் ஒலிபெருக்கிகளைப் பொருத்திக் கொண்டு, அலைபேகளில் இருந்து பாடல்களைக் கேட்டுக் கொண்டே செல்பவர்களைக் கண்டு கொள்வதே இல்லை; எச்சரிப்பதும் இல்லை; தண்டம் விதித்ததும் இல்லை. அது ஏன் என்றும் புரியவில்லை. விழுந்து சாகட்டும் என்று நினைக்கின்றார்களா?
11. அலைபேசிகளை மின்னூட்டம் செய்யும்போது பேசக் கூடாது. எச்சரிக்கை. உங்கள் காதுச் சவ்வு, மிகமிக மிகமிக மென்மையானது. கிழிந்து விட்டால், கடைசி வரை கேட்க முடியாது. பாதுகாத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு.
12. கால்சட்டையின் முன்புறம் உள்ள பையில் அலைபேசிகளை வைப்பதால், ஆண்களுக்கு விந்தணுப் பைகளைப் பாதிக்கும்.
13. உங்கள் உடல் வளர்ந்த, முதிர்ந்த உடம்பு. ஓரளவுக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உடல் பட்டுப் போன்றது. அதைப் பாதுகாக்க வேண்டும். அலைபேசிகளின் மின்காந்த, வானொலி, மற்றும் நுண்ணலை கதிர்வீச்சுகள் குழந்தைகளைக் கடுமையாகப் பாதிக்கும். அதிலும் குறிப்பாக, மூளையையும், காது சவ்வுகளையும் கடுமையாகப் பாதிக்கும். மூளை வளர்ச்சியைத் தடுத்து விடும். நினைவு ஆற்றல் குறைந்து விடும். எனவே, குழந்தைகள் கையில் அலைபேசிகளைக் கொடுக்காதீர்கள். அதில் பல மணி நேரம் விளையாட விடுவது பெருங்கேடு. அதேபோல கர்ப்பிணிப் பெண்களும் செல்போன் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும்.
14. உறங்கச் செல்வதற்கு முன்பு நீண்ட நேரம் பேசினால், நீங்கள் முழுமையாக உறங்க முடியாது. அந்தப் பேச்சு தொடர்பாகவே உங்கள் மூளை சிந்தித்துக் கொண்டே இருக்கும். எனவே, இரவு ஒன்பது மணிக்கு மேல் பேசாதீர்கள். கண்டிப்பாக மூளைக்கு 6 மணி நேரம் முழுமையான ஓய்வு தேவை. எப்போது போன் வரும் என்று எதிர்பார்த்து, தலைக்கு அருகிலேயே வைத்துக் கொண்டு இருப்பது மிகமிகத் தவறு.
15. இருதய அறுவை மருத்துவம் செய்து, இதயத்துடிப்புக் கருவி பொருத்தி இருப்பவர்கள் அலைபேசியில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதயத் துடிப்புக் கருவியின் இயக்கத்துக்கு, அலைபேசி இடையூறு செய்யும்.
16. அலைபேசி கோபுரங்கள் உள்ள இடங்களில், 400 மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கின்ற உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு, கேன்சர் நோய் வருவதற்கான வாய்ப்புகள் மூன்று மடங்கு அதிகம். அவர்களுக்கு மன அழுத்தம், உணவு செரிமானக் கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் அலைபேசிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளன. அதுகுறித்த விரிவான அறிக்கைகள், இணையதளத்தில் காணக் கிடைக்கின்றன. படித்துப் பாருங்கள்.
17. அமெரிக்காவில், ஒரே ஆண்டில், கார் ஓட்டும்போதே அலைபேசியில் பேசி, விபத்தில் சிக்கிச் செத்தவர்களின் எண்ணிக்கை 17,000.
18. லண்டன் நகரில், பொது இடங்களில் ஐந்து இலட்சம் கண்காணிப்புப் படக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. அங்கே நீங்கள் ஒரு மணி நேரம் சாலையில் இறங்கி நடந்தால், ஏழு இடங்களில் உங்கள் உருவம் பதிவாகி விடும். அதுபோல, பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஒருவர் அலைபேசி அழைப்புக்குப் பதில் சொல்ல இயக்கியபோது, அங்கே தீப்பிழம்பு உருவாகி அவர் உடல் கருகிச் சாகின்ற படக் காட்சிகள், இணையத்தில் உள்ளன. மற்றொருவர், துணியைத் தேய்த்துக் கொண்டு இருக்கும்போது மணி அடிக்க, ஏதோ ஒரு சிந்தனையில், எடை குறைந்த இஸ்திரிப் பெட்டியை எடுத்துக் காதில் வைத்துக் கொள்வதையும் பார்க்கலாம்.
19. உங்கள் கைகளில் உள்ள அலைபேசியை, ஆபத்தான இடங்களில் இயக்கும்போது, அது ஒரு தானியங்கியாகச் செயல்பட்டு, குண்டுகளை வெடிக்க வைத்து விடும்.
20. பெருமழை பெய்யும்போதும், பலத்த இடிச் சத்தம் கேட்கும்போதும், மின்னல் வெட்டும்போதும் பேசக்கூடாது. அந்த வேளைகளில், அலைபேசி ஒரு இடிதாங்கி போலச் செயல்பட்டு, இடி,மின்னலை உங்களை நோக்கி ஈர்த்துவிடும்.
அலைபேசிகளைத் தொலைத்தவர்கள்
அலைபேசிகள் அறிமுகம் ஆகி, பத்து ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால், பத்துக்கும் மேற்பட்ட அலைபேசிகளைத் தொலைத்தவர்களை நான் அறிவேன்.
“அழகாக இருக்கிறதே, நண்பர் வைத்து இருக்கின்றாரே” என்பதற்காக, அதேபோன்ற, விலை உயர்ந்த அலைபேசியை வாங்காதீர்கள். என்னுடைய நண்பர் ஒருவர்,  தம்முடைய ஒரே மகனுக்காக, சென்னையில் இருந்து, 20,000 ரூபாய் விலையில் ஒரு போன் வாங்கிக் கொண்டு போனார். ஒரு வாரம்தான் ஆனது. கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கின்ற மகன், வீட்டுக்கு வருவதற்கு முன்பு தொலைந்து போய்விட்டது. ஒருமுறைகூடப் பேசவில்லை.
நிறையப் பேர் கீழே தவற விட்டு உடைத்து இருப்பார்கள்;குனிந்து பார்க்கும்போது தண்ணீருக்குள் விழுந்து இருக்கும். மழையில் நனைந்து, ஒரு சொட்டுத் தண்ணீர் உள்ளே இறங்கினாலும் அவ்வளவுதான். வீணாகிப் போகும். கவனம் இல்லாவிட்டால், கவலைதான்.
வீண் பெருமைக்காக, விலை உயர்ந்த அலைபேசியை வாங்காதீர்கள். உங்கள் தேவைக்கு ஏற்ப, குறைந்த விலையில் வாங்கிப் பேசுங்கள். தொலைந்து போனாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு முதலிலேயே உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
தவறான அழைப்புகள்
தவறான அழைப்புகளைத் தவிர்த்து விடுங்கள். அது நமக்கான அழைப்பு இல்லை என்று தெரிந்தால், மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல், உடனே துண்டித்து விடுங்கள். முகம் அறியாத, எதிர்பாலினருடன் தேவை இல்லாமல் பேசுவதும் தீமையே.
நன்மைகள்
கொலைகாரர்கள், குற்றவாளிகள், கள்ளத் தொடர்புகள் வைத்துக் கொண்டு இருப்பவர்கள், அலைபேசிகளால் எளிதாக மாட்டிக் கொள்கின்றார்கள். இன்றைக்கு எந்த ஒரு குற்ற இயல் வழக்கு என்றாலும், ஒருவருடைய அலைபேசி உரையாடல்களை, ஓராண்டு ஆய்வு செய்தாலே போதும்; ஆவணங்கள் எளிதாகக் கிடைத்துவிடும். அப்படித்தான் காவல்துறை செயல்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு நாளிதழ் செய்திகளைப் படித்துப் பாருங்கள். தமிழகத்தில் நடைபெற்ற கொலை வழக்குகளில் கைதான குற்றவாளிகள் அனைவருமே, அலைபேசியால்தான் மாட்டிக் கொண்டார்கள் என்பது புரியும். ஒருவர், தான் திருடிய அலைபேசியை, ஓராண்டு கழித்துப் பயன்படுத்தும்போது மாட்டிக் கொண்டார்.
கடந்த மாதம் சென்னையில் தன் மனைவியைக் கொலை செய்த கல்லூரிப் பேராசிரியர், அதற்கு முதல்நாள், கள்ளக்காதலியோடு, ஒரே நாளில் அலைபேசியில் ஆறு மணி நேரம் பேசி இருக்கின்றார். அப்படி என்னதான் பேசினார்களோ தெரியவில்லை. ஆனால், அந்த உரையாடலுக்குப் பிறகுதான், அவர் கொலை செய்து இருக்கின்றார். அந்த உரையாடல்தான், அவரைக் குற்றவாளியாக ஆக்கி இருக்கின்றது. இப்போது இருவரும் சிறையில் இருக்கின்றார்கள்.
எண்பதுகளில்...
1984 ஆம் ஆண்டு, என்னுடைய அம்மா வழிப் பாட்டி, உடல்நலக் குறைவுற்று, சென்னையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ள செய்தி, சங்கரன்கோவிலுக்கு, தந்தி வழியாகக் கிடைத்தது. என்ன நிலைமை என்று அறிய, தொலைபேசியில் அவசர இணைப்புக்காகப் பதிவு செய்தோம். ஒன்றரை நாள் கழித்துத்தான் இணைப்பு கிடைத்தது. சென்னைக்குப் புறப்பட்டு வந்த இரண்டு நாளில் பாட்டி இறந்து போனார்.
1960 களில் தொடங்கி, 1990 வரையிலும், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் சென்றவர்கள், அங்கே விபத்தில் சிக்கி இறந்துவிட்டால், அவர்களுடைய உடலை, உடனே பெற்றுவிட முடியாது.
90 களில், அப்படி இறந்த பலரது உடல்களைக் கொண்டு வர மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளை நான் அறிவேன். அப்போதெல்லாம், ஓராண்டுக்கும் மேல் ஆனது. ஏன், ஒன்றேமுக்கால் ஆண்டு கழித்து ஒருவருடைய உடல் வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களில் இறந்த இருவரது உடல்களை, பத்துப் பதினைந்து நாள்களுக்குள் கொண்டு வந்து சேர்க்க முடிந்தது. காரணம், அலைiபேசிகள்தாம். உடனுக்குடன் தொடர்புகொண்டு, தேவையான ஆவணங்களைத் தாக்கல் செய்ய முடிந்தது.
எண்பதுகளில், பூடான் நாட்டில் நான் இரண்டு ஆண்டுகள் பணி ஆற்றியபோது, அந்த நாட்டில் தொலைபேசிகளே கிடையாது. நான் பணிபுரிந்த டாடா சுரங்க அலுவலகத்திலும், அங்கே இருந்த வீடுகளுக்கும் என 25 உள் இணைப்புகள் மட்டுமே இருந்தன. அவ்வளவுதான். எனவே, இரண்டு ஆண்டுகளாக நான் பெற்றோரோடு, உறவினர்களோடு பேசியதே இல்லை. 
1986 ஆம் ஆண்டு, என் தந்தையார் தேர்தலில் வெற்றி பெற்று, சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவராக ஆன செய்தியை, 40 நாள்கள் கழித்து வந்த கடிதத்தின் வழியாகத்தான் அறிந்து கொண்டேன். நான் ஊருக்குத் திரும்பி வந்தபிறகுதான், என் சகோதரிக்கு ஒரு குழந்தை பிறந்து ஓராண்டு ஆகி இருப்பதை அறிந்தேன்.  முன்பு அமெரிக்காவுக்குச் சென்றவர்கள், போனால் போனதுதான். அவர்களைப் பார்க்கவே முடியாது. ஐந்து, பத்து ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்தாலும்,  ஒருவருக்கும் தெரியாமல் வந்து போய் விடுவார்கள்.
ஆனால் இன்றைக்கு, அமெரிக்காவில் மட்டும் அல்ல, உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் அலைபேசித் திரையில் பார்த்துக்கொண்டே உரையாட முடிகின்றது.  அயல்நாடுகளில் நடைபெறுகின்ற தமிழ் அமைப்புகளின் கூட்டங்களில், அலைபேசி வழியாக தலைவர் வைகோ அவர்களுடைய உரைகள், ஒலிபரப்பாகின்றன. உங்கள் கையில் இருக்கின்ற அலைபேசியை வைத்துக் கொண்டு, உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும், அடுத்த நொடியிலேயே தொடர்பு கொண்டு கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள முடிகின்றது.
“25 ஆண்டுகளுக்கு பிறகு கல்லூரி நண்பர்கள் ஒன்றுகூடல்” என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பார்க்கின்றோம். அவர்களை ஒன்றாக இணைத்தது அலைiபேசிககள்தாம். எனவே, தொலைந்து போன நட்பையும் மீட்டுக் கொள்ள அலைபேசிகள் உதவுகின்றன.
இப்படி, அலைபேசிகளின் நன்மை, தீமைகள் என எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.
சுருக்கமாகச் சொல்வது என்றால், அலைபேசிகளை முறையாகப் பயன்படுத்தினால் நன்மை; தவறாகப் பயன்படுத்தினால் தீமை.
இந்த முகவரிகள், அலைபேசி மற்றும் தொலைபேசி எண்கள் கையேடு, உங்கள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்!
- அருணகிரி

தமிழகத்தை இருளில் தள்ளிய காங்கிரஸ்

      இந்தியாவை, தமிழகத்தை இருளில் தள்ளிய மின் தடைக்கு, மின் பற்றாக்குறைக்கு கூடங்குளம் போராட்டம்தான் காரணம், தி.மு.க. அரசுதான் காரணம், அ.தி.மு.க. அரசுதான் காரணம், நெய்வேலி மின்சாரம் கர்நாடகா கொண்டு செல்லப்படுவதுதான் காரணம் என்று அலசி ஆராய்ந்து கொண்டு இருக்கின்றோம்.
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில் இருந்து சுமார் 200 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைத்தாலே அது உலக அதிசயம்தான்.
காங்கிரஸ், தி.மு.க. கட்சியினர் ஒப்பந்தகாரர்களாக இருந்து, பார்த்துப் பார்த்து உருவாக்கிய அந்த அணு உலை இயங்கத் துவங்கினால் என்ன ஆகுமோ என்பது வேறு கதை.
தி.மு.க. ஆட்சியிலும் சரி, அ.தி.மு.க.ஆட்சியிலும் சரி மத்திய அரசிடம் போராடி தங்களது சுய தேவைகளைத் தீர்த்துக் கொண்டார்களே தவிர மின் உற்பத்தி குறித்த தீவிர நடவடிக்கைகள் எதுவுமில்லை.
முன்பெல்லாம் மாநில அரசின் மின் உற்பத்தி திட்டங்கள் பற்றி ஆய்வு செய்து அனுமதி வழங்குவதோடு, அதற்கான திட்டத்தொகையில் ஒரு பகுதியை மத்திய அரசு வழங்கி வந்தது. இந்த நடைமுறைக்கு 1992-ல் மன்மோகன் சிங் (அப்போது நிதித்துறை அமைச்சர்) மற்றும் மாண்டேக் சிங் அலுவாலியா (அப்போதைய நிதித்துறைச் செயலாளர்) ஆகியோரின் பரிந்துரையில் காங்கிரஸ் அரசு தடை போட்டது.
மாநில அரசுகளுக்கு, மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளும் மின் திட்டங்களுக்கு அனுமதியில்லை என்றும் தனியார் மின்திட்டங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் எனவும் அறிவித்தனர்.
ஒவ்வொரு மாநிலமும் தங்களது மின் தேவையில் 65 சதவிகிதத்தை தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும், மீதி 35 சதவிகிதம் விழுக்காடுகளை மத்திய அரசு தனது மின் தொகுப்பிலிருந்து வழங்கும் என்ற நிலை மாறத் துவங்கியது.
கருணாநிதியும், ஜெயலலிதாவும் எந்தவொரு மின் திட்டங்களையும் புதியதாக உருவாக்கவில்லை என்று மாறி, மாறி குற்றம் சாட்டலாம்; அதற்கு உருப்படியான முயற்சி எடுக்காமல் இருக்கலாம். இதன் பின்னணி, அதாவது உண்மைக் காரணம் என்னவென்றால் மத்தியில் காங்கிரஸ் கட்சி தனியார்மயத்தின் மீது கொண்ட பாசம்தான்.
தனியார் அனல் மின் உற்பத்தி நிலையங்களை ஊக்கப்படுத்தி அரசின் வரிப்பணத்தில் தனியாரிடம் இருந்து தான் மின்சாரம் வாங்க வேண்டும் என்ற நெருக்கடி நிலைக்கு மாநில அரசுகளை கொண்டு சென்றது காங்கிரஸ் அரசு.
புரட்சியாளர் அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட 1948 மின்சாரச் சட்டத்தின்படி விவசாயம், தொழில், வீட்டு உபயோகம், அத்தியாவசியத் தேவை என லாப நோக்கமின்றி குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவையாகவும் மின்சாரம் இருந்து வந்தது.
உலக வங்கியின் வேலையாட்களாக பயிற்சி பெற்று வந்த காங்கிரஸ் கமிட்டியின் மன்மோகன், சிதம்பரம், அலுவாலியா கும்பலோ உலக வங்கிக்கு கட்டுப்பட்டு மின்சார பகிர்மானத்தை வரையறை செய்தார்கள். பின்னால் வந்த பாரதிய ஜனதா அரசோ மின்சார சட்டம் 2003 என புதிய சட்டத்தை உருவாக்கினார்கள். அதாவது மின்சாரம் அத்தியாவாசியப் பொருள் அல்ல, சேவை சார்ந்த விசயம் கிடையாது. அது விலை கொடுத்து வாங்க வேண்டிய விற்பனைச் சரக்கு என்ற நிலையை அரசே உருவாக்கியது. அதனை காங்கிரஸ் அரசும் தீவிரமாக அமல்படுத்த தொடங்கினார்கள்.
தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் அரசின் சலுகைகள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு, நமது மண்ணின் வளத்தையும், நீரையும், உழைப்பையும் சுரண்டி, சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தி மின்சாரம் தயாரிப்பார்கள். அந்த மின்சாரத்தை யார் அதிகம் விலை கொடுத்து வாங்குகிறார்களோ அவர்களுக்கு விற்பனை செய்வார்கள்.
அது பாகிஸ்தானாகவோ, பங்களாதேசமாகவோ, இலங்கையாகவோ அல்லது வெளி மாநிலங்களாவோ இருக்கலாம். நமது ஊரில் உள்ள பன்னாட்டு கம்பெனிகளாகவும் இருக்கலாம். இதனை சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கின்றது ”2003ம் ஆண்டு மின்சார சட்டம்”.
சேவையாக வழங்க வேண்டிய மின்சாரம் சட்டப் பூர்வமாக விலை பேசப்படுகின்றது.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, யார் செத்தாலும் பரவாயில்லை எனக்கு மின்சாரம் கிடைத்தால் போதும் என்ற சுயநலப் போக்கோடு நாம் வாழ்கின்றோமே, அதற்கு வழிகாட்டியது காங்கிரஸ் அரசு.
மின்சார வாரியத்தை நஷ்டத்தில் தள்ளியது, வெளி நாடுகளுக்கு மின்சாரத்தை கொண்டு செல்வது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரத்தைக் கொடுப்பது, அரசின் மின் திட்டங்களுக்கு தடை போட்டு தனியார் மின் திட்டங்களை ஊக்கப்படுத்தியது என எல்லா விதத்திலும் இன்றைய மின் தடைக்கும், நாளைய மின் தடைக்கும் மூலக் காரணமாக இருப்பவர்கள் காங்கிரஸ் கட்சினர்.
இந்தியா ஒளிர்கிறது என்று கோசமிட்ட பாரதிய ஜனதா கட்சியினரும் இதற்கு சற்றும் சளைக்காதவர்கள்தான். சுதேசி என்ற முகமூடியோடு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயத்திற்கு தாரைவார்த்து மக்களைத் தவிக்கவிடுவதில் அவர்களும் கில்லாடிகள் தான்.
இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய இயக்கம் என்ற ஒரே தகுதியோடு இந்தியாவை விலை பேசி வருகின்றது காங்கிரஸ். அதற்கு மின் தட்டுப்பாடு மட்டுமில்லை; இழக்கவேண்டியது அதிகம் இருக்கின்றது. அதற்குள் விழித்துக் கொண்டால், பிழைத்துக் கொண்டோம்!.

வீடுகளில் கொசுக்களை விரட்ட

       நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம். இதனால் கொசுக்கள் அழிவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய வீட்டு கொசு விரட்டிகள் என்னவென்று பார்ப்போமா!!!
இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட...
தேங்காய் நார்: தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல், வீட்டில் பல செயல்களுக்கும் பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நார்கள், வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுவதோடு, வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது. எவ்வாறென்றால், இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும். தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது.
ஆகவே அந்த நார்களை வாங்கி வந்து, மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி, அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து, சிறிது நேரம் கழித்து பாருங்கள், ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது. இந்த புகையால் உடலுக்கு பாதிப்பு வராதா? என்று கேட்கலாம். இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
கற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஆனால், ஒரு பிரச்சனை என்னவென்றால், கற்பூரத்தை காற்றில் வைத்தால், அது உடனே கரைந்துவிடும். ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து, எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால், கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது. இல்லையென்றால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.
கெரோசின் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த, கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும். அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாவில், கெரோசினை விட்டு, அதில் சிறிது கற்பூரத்தை விட்டு, மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்.

அம்பேத்கர்

மதத்தை அழிப்பது என்று நான் கூறுவதன் பொருள் என்ன என்பதைச் சிலர் புரிந்துகொள்ளா மலிருக்கலாம்; சிலருக்கு இந்தக் கருத்து வெறுப் பாயிருக்கலாம்; சிலருக்கு அது புரட்சிகரமாகத் தோன்றலாம். எனவே நான் என்னுடைய நிலையை விளக்கி விடுகிறேன். தத்துவங்களுக்கும் விதிகளுக்கும் இடையே நீங்கள் வேறுபாடு கருதுகிறீர்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் வேறுபாடு கருதுகிறேன். இந்த வேறுபாடு உண்மையானது, மிக முக்கியமானது என்றும் நான் கூறுகிறேன். விதிகள் யதார்த்தமான நடைமுறைபற்றியவை; காரியங்களைக் குறிப்பிட்ட முறைப்படி செய்வதற்கு வழக்கமான வழிகள் அவை. ஆனால் தத்துவங்கள் அறிவு சம்பந்தப்பட்டவை. விஷயங்களை மதிப்பிட்டு நிர்ணயம் செய்வதற்கு உபயோகமான வழிகள் அவை. விதிகள், ஒரு காரியத்தை ஒருவர் செய்யும் போது என்ன வழியில் செயல்பட வேண்டும்
என்று கூறுகின்றன. விதிகள், சமையல் குறிப்புகள் போல, என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று கூறுகின்றன. தத்துவம் என்பது -உதாரணமாக நீதித் தத்துவம் - ஒருவன் தன்னுடைய ஆசைகளும் நோக்கங்களும் எப்படி அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் கவனிக்க வேண்டிய அளவை ஆகும். அது, ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது என்னென்ன அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டி சிந்தனைக்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு தத்துவங் களுக்கும் விதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு காரணமாக அவற்றின் அடிப்படையில் செய்யப் படும் செயல்களின் தரமும் தன்மையும் வேறுபடு கின்றன. நல்லது என்று சொல்லப்படுவதை ஒரு விதியின் காரணமாகச் செய்வதற்கும், தத்துவத்தின் அடிப்படையில் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தத்துவம் தவறாக இருக்கலாம். ஆனால் அதன் அடிப்படையில் செய்யப்படும் செயல் உணர்வுடனும் பொறுப்புடனும் செய்யப்படுகிறது. விதி சரியானதாக இருக்கலாம். ஆனால் அதைப் பின் பற்றும் செயல் யந்திரத்தனமானது.
ஒரு மதச் செயல் சரியானதாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம், பொறுப்புடனும் செய்யப்படுவதாகவேனும் இருக்க வேண்டும். இவ்வாறு பொறுப்புடன் செய்யப்பட வேண்டுமானால் மதம், முக்கியமான தத்துவங்கள் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.; அது விதிகள் மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடாது. மதம் என்பது வெறும் விதிகள் மட்டும் சம்பந்தப் பட்டதாகும்போது அது மதம் என்ற நிலையை இழந்து விடுகிறது. ஏனென்றால் அது மதச் செயலில் பொறுப்பைக் கொன்று விடுகிறது. பொறுப்புடன் செய்யப்படுவதுதான் மதச் செயலின் சாரமான பண்பு. இந்து மதம் என்பது என்ன? அது தத்துவங் களின் தொகுப்பா அல்லது விதிகளின் தொகுப்பா? இந்து மதம், வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் கூறப்பட்டுள்ளபடி பார்த்தால், யாகம், சமூகம், அரசியல், சுகாதாரம் சம்பந்தப்பட்ட விதிகள், ஒழுங்கு முறைகள் ஆகிய எல்லாம் கலந்த ஒரு தொகுப்பாகவே இருக்கிறது. மதம் என்று ஒரு இந்து குறிப்பிடுவது பல்வேறு ஏவல்களும் தடை களும் கொண்ட ஒரு தொகுப்பே. இவற்றில், எல்லா மக்களுக்கும், எல்லா இனங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய ஆன்மிகத் தத்துவங்கள் என்ற பொருளில் கூறப்படும் மதம் இல்லை. அப்படியே இருந்தாலும் ஒரு இந்துவின் வாழ்க்கையை நெறிப்படுத்தும் அம்சமாக அது காணப்படவில்லை.
ஒரு இந்துவுக்குத் தர்மம் என்பது பல ஏவல்கட்டளைகளும் தடைக் கட்டளைகளுமே ஆகும். வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தையும், உரைகாரர்கள் அதைப் புரிந்துகொண்டிருக்கும் விதத்தையும் பார்த்தால் இது தெளிவாகத் தெரிகிறது. வேதங்களில் தர்மம் என்ற சொல் பெரும்பாலும் மதக் கட்டளைகளையும் சடங்குகளையும் குறிப்ப தாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜைமினி தம் முடைய பூர்வ மீமாம்ஸையில் தர்மம் என்பதற்கு இவ்வாறு பொருள் கூறுகிறார்: “(வேதத்தில்) கட்டளையாகக் கூறப்படுகின்ற விரும்பத்தக்க குறிக்கோள் அல்லது பலன்.” எளிமையாகச் சொன்னால், இந்துக்கள் மதம் என்று கூறுவது உண்மையில் சட்டமே; அல்லது அதிகமாகப் போனால் சட்டப்படியாக வகுப்பு ஒழுக்கமுறையே. இப்படி கட்டளைகளின் தொகுப்பாக அமைந்துள்ள ஒன்றை நான் மதம் என்று மதிக்க மாட்டேன். இவ்வாறு மதம் என்று மக்களிடம் தவறாகக் காட்டப்படும் கட்டளைத் தொகுப்புகளின் முதல் தீமை, அறநெறி வாழ்க்கை இயற்கையாக, சுயேச்சை யானதாக இருப்பதற்கு மாறாக, வெளியிலிருந்து சுமத்தப்படும் விதிகளைக் கவலையுடனும் அடிமைத் தனமாகவும் அனுசரித்து நடக்கும் செயலாக மாறி விடுகிறது என்பதாகும்.
லட்சியங்களுக்கு விசுவாச மாக நடப்பதற்குப் பதிலாக, கட்டளைகளுக்கு இயங்க நடப்பதே வாழ்க்கை ஆகி விடுகிறது. எல்லாவற்றிலும் பெரிய தீமை, அந்தச் சட்டங்கள் நேற்றும், இன்றும், இனி எப்போதும் மாறாமல் ஒரே மாதிரியாக இன்னொரு வகுப்புக்கு இல்லை என்பது இவற்றில் காணப்படும் அநீதி. எல்லாத் தலைமுறைகளுக்கும் இதே சட்டங்கள்தான் என்று தீர்மானிக்கப்பட்டிருப் பதால் இந்த அநீதி நிரந்தரமாகிறது. தீர்க்க தரிசிகள் அல்லது சட்டம் அளிப்போர் என்று கூறப்படும் சில நபர்களால் இந்த விதித் தொகுப்புகள் உருவாக்கப் பட்டன என்பது ஆட்சேபிக்கப்படவில்லை. ஆனால் இவை இறுதியானவை, மாற்றமுடியாதவை என்று கூறப்படுவது ஆட்சேபத்துக்குரியது. இன்பம் என்பது ஒரு மனிதனின் நிலைமைகளுக்குத் தகுந்தபடி மாறக் கூடியது. அது மட்டுமின்றி வெவ்வேறு மக்களின் வெவ்வேறு காலங்களின் நிலைமைக்குத் தகுந்த படியும் அது மாறக்கூடியது. அப்படியானால், என்றென்றைக்கும் மாறாத இந்தச் சட்டங்களைச் சகித்துக்கொள்ளச் செய்வது மக்களை நெருக்கிப் பிடித்துக் கட்டிப் போடுவது போலாகுமல்லவா? எனவே இப்படிப்பட்ட மதத்தை அழிக்க வேண்டும் என்று கூறுவதில் எனக்குத் தயக்கம் இல்லை. இப்படிப்பட்ட மதத்தை அழிக்கப் பாடுபடுவது மதத்துக்கு விரோதமான செயல் அல்ல.
இம்மாதிரி ஒரு சட்டத்தை எடுத்து வைத்து மக்களிடம் அதை மதம் என்று பொய்ப்பெயர் சூட்டியிருக்கும் முக மூடியைக் கிழித்தெறிவது உங்கள் கடமை என்று நான் கருதுகிறேன். இது நீங்கள் அவசியமாகச் செய்ய வேண்டிய காரியம். மக்கள் மனத்தில் உள்ள தவறான எண்ணத்தைப் போக்கி, அவர்கள் மதம் என்று நினைப்பது உண்மையில் சட்டமேயன்றி மதம் அல்ல என்று உணரச் செய்தால், பின்பு அதைத் திருத்த வேண்டும் என்றோ ஒழிக்கவேண்டும் என்றோ அவர்கள் ஏற்கும்படியாகக் கூற முடியும். மக்கள் இதை மதம் என்று நினைக்கும்வரை அதை மாற்ற இணங்க மாட்டார்கள். ஏனென்றால், மதம் என்பது பொதுவாக மாற்றத்துக்கு உரியதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் சட்டம் என்பது மாற்றப்படக்கூடியது. ஆகவே மதம் என்று தாங்கள் நினைப்பது உண்மையில் பழசாகிப் போன சட்டம் தான் என்று மக்கள் தெரிந்து கொண்டால், அதில் மாற்றம் செய்வதற்கு அவர்கள் தயாராயிருப் பார்கள். ஏனென்றால் சட்டத்தை மாற்றலாம் என்பது அவர்கள் அறிந்து, ஒப்புக்கொண்டுள்ள விஷயமே.
விதிகளின் தொகுப்பாக அமைந்த மதத்தை நான் கண்டனம் செய்வதனால் மதமே தேவை யில்லை என்று நான் கூறுவதாகக் கருதக் கூடாது. மாறாக, மதத்தைப் பற்றி பர்க் (க்ஷரசமந) கூறியுள்ள கருத்து எனக்குச் சம்மதமானதே. அவர் கூறினார்: ‘உண்மையான மதம் சமூகத்துக்கு அஸ்திவாரமா யிருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டு தான் எல்லா அரசாங்கங்களும் அவற்றின் அதி காரங்களும் அமைந்துள்ளன.’ எனவே இந்தப் பழங்கால விதிகளாலான மதத்தை ஒழிக்க வேண்டும். நான் கூறும் போது, அதற்குப் பதிலாகத் தத்துவங் களாலான மதம் என்று வர வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட மதம்தான் உண் மையில் மதம் என்று கூறத் தகுந்தது.
மதம் மிகவும் அவசியம் என்று நான் உறுதியாக நம்புவதால், மதச் சீர்திருத்தத்தில் அவசியமாக இடம் பெற வேண்டிய அம்சங்கள் என்ன என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். அவை வருமாறு: (1) இந்து மதத்துக்கு ஒரே ஒரு பிரமாணமான புத்தகம் இருக்க வேண்டும். இது எல்லா இந்துக்களும் ஏற்கத்தக்கதாக, எல்லா இந்துக்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். இந்தப் புத்தகத்தைத் தவிர, வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் முதலாக, புனிதமானவையாகவும் அதிகாரபூர்வமானவை யாகவும் கருதப்படும் எல்லா இந்து மத நூல்களும் அவ்வாறு கருதப்படக்கூடாது என்று சட்டம் செய்ய வேண்டும். இவற்றில் கூறப்பட்டுள்ள மதக் கொள்கைகளையோ சமூகக் கொள்கைகளையோ பிரசாரம் செய்வதை தண்டனைக்குரியதாக்க வேண்டும். (2) இந்துக்களிடையே புரோகிதர்கள் இல்லாமல் ஒழித்து விடுவது நல்லது, ஆனால் இது இயலாது என்று தோன்றுவதால், புரோகிதத் தொழில் பரம்பரையாக வருவதை நிறுத்த வேண்டும். இந்து என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் புரோகிதராக வர அனுமதிக்க வேண்டும். இதற்கென அரசு நிர்ணயிக்கும் தேர்வில் தேர்ச்சி பெற்று, புரோகிதராக இருப்பதற்கு அரசின் அனுமதிப் பத்திரம் பெறாத எந்த இந்துவும் புரோகிதராக இருக்கக்கூடாது. (3) அனுமதிப் பத்திரம் இல்லாத, பெறாத புரோகிதர் நடத்தும் சடங்குகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அனுமதிப் பத்திரம் பெறாதவர் புரோகிதராகச் செயல்படுவதைத் தண்டனைக்குரியதாக்க வேண்டும். (4) புரோகிதர் அரசின் பணியாளராக இருக்க வேண்டும். ஒழுக்கம், நம்பிக்கைகள், வழிபாடு ஆகிய விஷயங்களில் அரசின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் மற்ற எல்லாக் குடி மக்களையும் போல அவரும் நாட்டின் பொது வான சட்டத்துக்கு உட்பட்டவராயிருக்க வேண்டும். (5) புரோகிதர்களின் எண்ணிக்கையை தேவையின் அடிப்படையில், ஐ.ஸி.எஸ். அதிகாரிகளின் விஷயத்தில் செய்யப்படுவது போல, அரசு வரையறை செய்து நிர்ணயிக்க வேண்டும்.
இவையெல்லாம் சிலருக்கு மிகத் தீவிரமான யோனைகளாகத் தோன்றலாம். ஆனால் என்னுடைய கருத்துப்படி இதில் புரட்சிகரமானது ஒன்றும் இல்லை. இந்தியாவில் ஒவ்வொரு தொழிலும் முறைப்படுத்தப்பட்டிருக்கிறது. எஞ்ஜினியர்கள், டாக்டர்கள், வழக்குரைஞர்கள் ஆகிய அனைவருமே தங்கள் தொழிலைச் செய்ய அனுமதிக்கப்படுவதற்கு முன் அதில் தாங்கள் தேர்ச்சி பெற்றிருப்பதைக் காட்ட வேண்டும். அவர்கள் தொழில் நடத்தும் காலம் முழுவதிலும் அவர்கள் நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டு நடப்பதுடன், தங்களுடைய தொழில் களுக்குரிய விசேஷ நடத்தைக் கோட்பாடுகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். புரோகிதர் தொழில் ஒன்றுதான் தேர்ச்சி தேவைப்படாத தொழிலாக உள்ளது. இந்து புரோகிதர் தொழிலுக்கு மட்டும் தான் குறிப்பிட்ட நடத்தைக் கோட்பாடுகள் இல்லை. ஒரு புரோகிதர் அறிவில் சூனியமாக, உடம்பில் ஸிஃபிலிஸ், கொனோரியா போன்ற நோய்கள் பீடித்தவராக, ஒழுக்கத்தில் அதமனாக இருக்கலாம். என்றாலும், புனிதமான சடங்குகளை நடத்தி வைக்கவும் இந்து கோவிலின் மூலஸ்தானத்தில் நுழையவும், இந்துக் கடவுளுக்குப் பூஜை நடத்தவும் அனுமதிக்கப்படுகிறார். இவையெல்லாம் இந்துக் களிடையே சாத்தியமாயிருப்பதற்குக் காரணம் புரோகிதராயிருப்பதற்குப் புரோகித சாதியில் பிறந் திருந்தால் போதும் என்று இருப்பதுதான். இது முற்றிலும் வெறுக்கத்தக்க நிலை.
இந்துக்களின் புரோகிதர் வகுப்பு, சட்டத்துக்கோ ஒழுக்க நெறிக்கோ கட்டுப்பட்டதல்ல என்பதுதான் இதற்குக் காரணம். தனக்கு எந்தக் கடமைகளும் இருப்பதாகவும் அது ஒப்புக் கொள்வதில்லை. அதற்குத் தெரிந்ததெல்லாம் உரிமைகளும் தனிச் சலுகைகளும்தான். சாதாரண மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு நாசக் கும்பலைப் போல் இவர்கள் தோன்றுகிறார்கள். புரோகித வகுப்பு, நான் மேலே குறிப்பிட்டது போன்ற சட்டங்கள் மூலம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அந்த வகுப்பு விஷமங்கள் செய்யாமலும் மக்களுக்குத் தவறான வழி காட்டா மலும் தடுப்பதற்கு இது உதவும். எல்லோரும் புரோகிதராக வர வழி செய்வதன் மூலம் அதில் ஒரு ஜனநாயகத் தன்மை ஏற்படும். பிராமணியத்தை ஒழிப்பதற்கும், பிராமணியத்தின் மறு அவதாரமான சாதிமுறையை ஒழிப்பதற்கும் இது துணை செய்யும். இந்து மதத்தைக் கெடுத்த நஞ்சு பிராமணியம். பிராமணியத்தை ஒழித்தால்தான் இந்து மதத்தை நீங்கள் காப்பாற்ற முடியும். இந்தச் சீர்திருத்தத்தை எந்தத் தரப்பினரும் எதிர்க்கக் கூடாது. ஆரிய சமாஜிகள் கூட இதை வரவேற்க வேண்டும். ஏனென்றால் இது அவர்களே கூறும் குண-கர்மக் கொள்கையைச் செயல்படுத்துவதேயாகும்.
இதை நீங்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும், உங்கள் மதத்துக்கு நீங்கள் ஒரு புதிய கோட்பாட்டு அடிப்படை கொடுக்க வேண்டும். இந்த அடிப்படை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள் கைக்கு, சுருக்கமாகச் சொன்னால், ஜனநாயகத்துக்கு இணக்கமானதாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் நான் புலமை பெற்றவன் அல்லன். ஆயினும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைக்கு இணக்கமான மதத் தத்துவங்களை வெளிநாடுகளி லிருந்து இரவல் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் உபநிஷதங்களிலிருந்தே இத்தகைய தத்துவங் களை எடுத்துக்கொள்ள முடியும் என்றும் என்னிடம் கூறப்படுகிறது. நீங்கள் அவ்வாறு எடுத்துக்கொள்ள முடியுமா அல்லது அதை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டியிருக்குமா, அல்லது அவற்றில் உள்ள மூலக் கருத்துக்களைப் பெருமளவுக்குச் சுரண்டியும் செதுக்கியும் செப்பம் செய்ய வேண்டியிருக்குமா என்று நான் கூற முடியாது.
புதிய கோட்பாடு அடிப் படை அமைப்பது என்றால் வாழ்க்கையைப் பற்றிய அடிப்படைக் கருத்துக்களையே முற்றிலுமாக மாற்றுவதாகும். வாழ்க்கையில் போற்றும் பண்புகள் முற்றிலும் வேறாக அமையும். மனிதர்களைப் பற்றியும் விஷயங்களைப் பற்றியும் கொண்டுள்ள மனப்பான்மைகள் முற்றிலுமாக மாற்றியமைக்கப் படும். அது மத மாற்றமாகும்; இந்த வார்த்தை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அது புதிய வாழ்க்கையாகும் என்று கூறுவேன். ஆனால் இறந்துபோன ஒரு உடலுக்குள் புதிய உயிர் புக முடியாது. புதிய உயிர், புதிய உடலில்தான் புக முடியும். புதிய உடல் வந்த அதனுள் புதிய உயிர் நுழைய வேண்டுமானால் பழைய உடல் மரிக்க வேண்டும். எளிமையாகச் சொன்னால், புதியது உயிர்பெற்று துடிப்புப் பெறத் தொடங்குவதற்கு முன் பழையது மறைந்து போக வேண்டும். சாஸ் திரங்களின் அதிகாரத்தை நீங்கள் விட்டொழிக்க வேண்டும் என்றும், சாஸ்திரங்கள் கூறும் மதத்தை அழிக்க வேண்டும் என்றும் நான் கூறியதன் பொருள் இதுதான்


                                                                                                                 அம்பேத்கர்

பாரதிதாசன்

தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள்
செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்
பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்
ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்
பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்!
புதிய பரிதியைப் புகழ்ந்து வாழ்த்தி
இதுதான் வல்லான் எழுதிய தமிழோ
எனும்படி இறக்கிய இளஞ்சூட்டின்சுவைப்
பொங்கல் இலைதொறும் போட்டுத் தேன்கனி,
செங்கரும்பின் சாறும் சேர்த்தே
அள்ளூர அள்ளி அள்ளிப் பிள்ளைகள்
தெள்ளு தமிழ்ப் பேச்சுக் கிள்ளைப் பெண்டிர்
தலைவரொ டுண்ணும் தமிழர் திருநாள்!
தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்!
இருளும் பனியும் ஏகின, பரிதி
அருளினால் எங்கணும் அழகு காண்கிறோம்!
கலக்கம் தீர்ந்தது! கருத்திடை அனைத்தும்
விளக்கம் ஆயின! மேன்மைத் தமிழைப்
போற்றுதல் வேண்டும்:
வண்மைத் தமிழர்
திராவிடர் என்று செப்பும் இனத்தின்
பெரும்பகை ஆரியர்; வரம்பு மீறாது
மறச்செயல் தொடங்க மறத்தல் வேண்டா.
ஆடலில் பாடலில் வீடுகள் சிறந்தன!
ஊடலில் கூடலில் உவந்தனர் மடவார்!
தெருவெலாம் இளைஞர் திறங் காட்டுகின்றனர்
சிரித்து விளையாடிச் செம்பட் டுடைகள்
அமைத்தபடி நிறைவேற்றி வைத்தல் வேண்டும்!
ஆள்வோர்க்குத் தமிழர்விடும் அறிக்கை இஃது!
தமிழ்முரசு கொட்டினோம் இணங்கா விட்டால்
சடசடெனச் சரிந்துபடும் ஆட்சிக் கோட்டை!
திராவிடரின் பகைவர்க்கே அடிமை யானோர்,
திராவிடர்க்கு நலம்புரிதல் குதிரைக் கொம்பே!
அரிய தமிழ் நாட்டுரிமை வேண்டும்; அன்றே
அன்புள்ள தெலுங்கர்க்கும் கேர ளர்க்கும்
உரிமையினை நாட்டுவதும் தமிழர் வேலை!
ஒன்று பட்டோம், ஜாதியில்லை; சமயமில்லை;
குரல்கேட்க ஆள்வோரின் காதே! ஒப்பம்
கூறுவாயே இன்றேல் புரட்சி தோன்றும்.
-
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

பெரியாரின் வார்த்தைகளில் அவரைப் பற்றி...

ஈ.வே.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.

அந்த தொண்டு செய்ய எனக்கு "யோக்கியதை" இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

இதை தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாக கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத் தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகின்றேன்.

சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகின்றேன்.


ஈ.வே.இராமசாமி